மும்பை: 2025-26ம் கல்வியாண்டு முதல் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாவது மொழி பாடமாக இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை, மகாராஷ்டிராவில் ஆளும் பாஜ அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை ஊக்குவிக்கிறது. அதனை செயல்படுத்தும் விதமாக, தற்போது அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதலே 3வது மொழிப்பாடமாக இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்பு, மும்மொழிக் கொள்கை இடைநிலைக் கல்வி முதல் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மராத்தி, ஆங்கில வழிப் பள்ளிகள் அனைத்திலும் 1ம் வகுப்பு முதலே இந்தி கற்பிக்க வேண்டும்.
மராத்தி, ஆங்கிலத்தை தவிர்த்து இது மாணவர்களுக்கு 3வது மொழியாக இருக்கும். தேசியக் கல்விக் கொள்கை 5+3+3+4 என்ற புதிய கல்வி அமைப்பை முன்மொழிகிறது. முதல் 5 வருடம் அடித்தளக் கல்வி, 3 வருடம் ஆயத்த படிப்பு, அடுத்த 3 வருடம் நடுநிலைக் கல்வி மற்றும் 4 வருடங்கள் இடைநிலைக் கல்வி என 4 கட்டங்களாக கல்வியை கற்பிக்க முன்மொழிகிறது. அதன் அடிப்படையில், ஆரம்பக் கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வரும் விதமாக மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் மாநில அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது குறித்து முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குநர் வசந்த் கல்பாண்டே கூறுகையில், ‘இந்தியை கட்டாயமாக்குவது நியாயமல்ல. தமிழ், கன்னடன், தெலுங்கு போன்ற இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கும் விருப்பம் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்’ என்றார்.
ஆசிரியர் அமைப்பு ஒன்றின் ஒருங்கிணைப்பாளர் பவுசாகேப் சாஸ்கர் கூறுகையில், ‘1ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு 3 மொழிகளை கற்பிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. குழந்தைகள் ஏற்கனவே மராத்தி படிக்கவும், எழுதவும் சிரமப்படுகிறார்கள். இப்போது அவர்களுக்கு இந்தியையும் சேர்த்து கற்பித்தால் மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும். இதுமட்டுமல்லாது, மகாராஷ்டிராவில் உள்ள பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். அவர்கள் 3 மொழிகளை எப்படி கற்பிக்க முடியும்’ என்று கூறினார்.
The post மும்மொழி கொள்கையின்படி மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் appeared first on Dinakaran.