‘புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க விரும்பவில்லை’ மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று கணவர் தற்கொலை: டெல்லியில் பயங்கரம்

காஜியாபாத்: புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க விரும்பவில்லை என கருதி மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே காஜியாபாத்தில் வசித்து வந்தவர் குல்தீப் தியாகி (46). ரியல் எஸ்டேட் புரோக்கர் செய்து வந்தார். இவரது மனைவி அன்ஷு. இவர்களுக்கு 2 மகன்கள். இந்நிலையில், குல்தீப் தியாகி புற்று நோயால் பாதிக்கப்பட்டார். நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. மருந்து செலவும் அதிகரித்ததால் குல்தீப் தியாகி விரக்தியடைந்தார். இதை மனைவியிடம் கூறி வருந்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று, திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி அன்ஷுவை சுட்டு கொன்றார் குல்தீப் தியாகி. பின்னர் தனக்கு தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்தார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு பக்கத்து அறைகளில் இருந்த மகன்கள் மற்றும் பெற்றோர், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வீட்டின் படுக்கை அறை தரையில் குல்தீப் தியாகி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அன்ஷு, ‘பெட்’டில் கிடந்தார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, இருவரையும் மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில், கணவனும், மனைவியும் இறந்து விட்டது தெரியவந்தது.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், குல்தீப் தியாகியின் அறையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். மருத்துவர்கள், அதை உறுதி செய்ததும் அதிர்ச்சியடைந்தேன். இது எனது குடும்பத்தினருக்கு தெரியாது. உயிர் வாழ்வது நிச்சயமற்றது என்பதால் சிகிச்சைக்காக பணத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாங்கள் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்ததால் எனது மனைவியை அழைத்து செல்கிறேன். இது எனது முடிவுதான். குழந்தைகளோ அல்லது மற்ற யாருமோ காரணம் இல்லை’ என்று கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ‘புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க விரும்பவில்லை’ மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று கணவர் தற்கொலை: டெல்லியில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: