940 கார் என்ஜின் திருட்டில் கியா நிறுவன ஊழியர் கைது: சிசிடிவி காட்சி மூலம் சிக்கினார், தமிழ்நாடு, கர்நாடகாவில் போலீசார் விசாரனை

திருமலை: ரூ.23.75 கோடி மதிப்புள்ள 940 என்ஜின் திருட்டு வழக்கில் தொடர்புடைய கியா கார் நிறுவன ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்ய சாய் மாவட்டம், பெனுகொண்டாவில் தென்கொரியா நாட்டை சேர்ந்த பிரபல கியா கார் நிறுவனத்தின் தொழிற்சாலை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் கார்கள் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் கடந்த ஜனவரி மாதம் வருடாந்திர கணக்குகளை ஆய்வு செய்ததில், 940 இன்ஜின்கள் காணாமல் போனதும், முறைகேடுகள் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து நிறுவனம் சார்பில், கடந்த மாதம் 19ம் தேதி தொழில்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தனர். இதற்கிடையே நிறுவன அதிகாரிகள் சந்தேகம்படும் நபர்களின் நடமாட்டத்தை சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பதான் சலீம் என்பவர் தான் பணி புரியும் இடத்தில் இருந்து, வேறு இடத்திற்குச் சென்று கொண்டிருந்ததை கார் நிறுவன அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், இன்ஜின்களை வாகனத்தில் கொண்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தனிப்படை போலீசார் பதான் சலீமைக் காவலில் எடுத்து விசாரனை செய்து சதித்திட்டத்தின் முழு விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் மற்றும் பதிவுகளை வைத்து சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காணாமல் போன ஒவ்வொரு இன்ஜினும் ரூ.2.50 லட்சம் மதிப்புடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் நிறுவனத்துக்கு ரூ.23.75 கோடி மதிப்புள்ள இன்ஜின் திருட்டு போனதால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இதனை மிகவும் சீரியஸ்சாக எடுத்து கொண்டுள்ளனர்.

The post 940 கார் என்ஜின் திருட்டில் கியா நிறுவன ஊழியர் கைது: சிசிடிவி காட்சி மூலம் சிக்கினார், தமிழ்நாடு, கர்நாடகாவில் போலீசார் விசாரனை appeared first on Dinakaran.

Related Stories: