நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தண்டையார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன். 1990களில் மதுக்கடை, பார்கள், கிரானைட் தொழிலில் கோலோச்சிய இவர், மதுக்கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வந்த பிறகு ஓட்டல் தொழிலில் கால் பதித்தார். பல்வேறு மாவட்டங்களில் தனியாகவும், பங்குதாரர்களுடன் இணைந்தும் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். நெல்லையில் செட்டிலான நயினார் நாகேந்திரன், 1989ல் அதிமுகவில் இணைந்தார். 2001ம் ஆண்டு நெல்லை மாவட்ட ஜெ. பேரவை செயலாளராக இருந்தார். அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதன் முறையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் போக்குவரத்து துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் என பதவி வகித்தார். 2006ல் 2வது முறையாக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் திமுக வேட்பாளர் மாலைராஜாவிடம் தோல்வியை தழுவினார்.
2011ம் ஆண்டு 3வது முறையாக நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், 2வது முறையாக எம்எல்ஏ ஆனார். அப்போது அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. பல்வேறு முறை அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்ந்த போது, தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நயினார் நாகேந்திரன் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அதிமுக ஆட்சி முடியும் வரை நயினார் நாகேந்திரனின் ஆசை, நிராசையாகவே இருந்தது. எனினும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 4வது முறையாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன், திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லெட்சுமணனிடம் தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவை கை கழுவிய நயினார் நாகேந்திரன், பாஜவில் இணைந்து மாநில துணை தலைவரானார். 2019ல் பாஜ – அதிமுக கூட்டணி ஏற்பட்ட போது, பாஜ சார்பில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். அதுவரை மாநில தேர்தல்களை மட்டுமே சந்தித்து பழகிய நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் தொகுதி தனக்கு சாதகமாக இருக்கும், மத்தியில் பாஜ ஆட்சியில் இருப்பதால் ஒன்றிய அமைச்சராகி விடலாம் என கணக்குப் போட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் புதுவை உள்பட 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றியை பெற்றது.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார். நயினார் நாகேந்திரன் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ஓபிஎஸ் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக-பாஜ கூட்டணி தொடர்ந்ததால் தனது சொந்த தொகுதியான நெல்லையை கேட்டுப் பெற்ற நயினார் நாகேந்திரன், பாஜ சார்பில் களமிறங்கி வெற்றி பெற்று, 3வது முறையாக எம்எல்ஏ ஆனார். இந்த தேர்தலில் பாஜ சார்பில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதால், சட்டமன்றத்தில் சீனியரான நயினார் நாகேந்திரனுக்கு பாஜ சட்டமன்ற குழுத் தலைவர் பதவி கிடைத்தது.
அதன்பிறகு அதிமுக- பாஜ கூட்டணி உடைந்தது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான அணி பாமக, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிட்டார் நயினார் நாகேந்திரன். இவரை ஆதரித்து பிரதமர் மோடி, அம்பைக்கு ஹெலிகாப்டரில் வந்து பிரசாரம் செய்தார். தேர்தலுக்கு முன்பாக நெல்லை நீதிமன்றம் எதிரே நடந்த பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசினார். எனினும் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட்புரூஸிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
தொடர்ந்து அதிமுக- பாஜ கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என பேசப்பட்டு வந்தாலும், தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாஜவிடம் அதிமுக சரணடைந்துள்ளது. கூட்டணி அறிவிப்பும் வெளியாகி உள்ள நிலையில், பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைவர் தேர்தல் மூலம் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை வரவேற்று நெல்லையில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நெல்லை வடக்கு பைபாசில் உள்ள பாஜ அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர்கள் (வடக்கு) முத்துபலவேசம், (தெற்கு) தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் பாஜவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நயினார் நாகேந்திரன் பாஜ மாநில தலைவராக தேர்வானதால், அவரது ஆதரவாளர்கள் பலரும் சென்னைக்கு படையெடுத்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன் நெல்லையைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு பாஜவில் தூத்துக்குடி, சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பாஜ தலைவர்களாக இருந்த இல.கணேசன் சென்னையைச் சேர்ந்தவர். சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூரைச் சேர்ந்தவர். தமிழிசை சவுந்தரராஜன் சொந்த ஊர் குமரி மாவட்டம் என்றாலும், சென்னையில் செட்டிலாகி விட்டவர். பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். டாக்டர் என்.எஸ்.சந்திரபோஸ் தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது மீண்டும் தென்மாவட்டமான நெல்லையைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், பாஜ மாநில தலைவர் பதவியை பிடித்துள்ளார்.
* அதிமுகவில் இருந்து 2வது தலைவர்
அதிமுகவில் இருந்து பிரிந்து தேசிய கட்சியான பாஜவில் இணைந்து மாநில தலைவராக தேர்வாகியுள்ளார் நயினார் நாகேந்திரன். இதற்கு முன்பு அதிமுக மூத்த தலைவராக இருந்த திருநாவுக்கரசர், அதிமுகவில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். பின்னர் அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக பணியாற்றியவர். அதே வழியில் அதிமுகவில் இருந்து பிரிந்து தேசிய கட்சியான பாஜவில் இணைந்த நயினார் நாகேந்திரன் தற்போது மாநில தலைவராக உயர்ந்துள்ளார்.
* நழுவிய பதவி மீண்டும்…
நயினார் நாகேந்திரன் பாஜவில் சேர்ந்தவுடன் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவ்வப்போது நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் ஆவார் என பேசப்பட்டு வந்தாலும், கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜவில் இணைந்தார். அப்போது எல்.முருகன், மாநில தலைவராக இருந்தார். அவர், ஒன்றிய அமைச்சர் ஆனதால் அண்ணாமலைக்கு யோகம் அடித்தது. இதனால் மாநில பாஜ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது நழுவிய மாநில தலைவர் பதவியை தற்போது நயினார் நாகேந்திரன் பிடித்துள்ளார்.
* புது வீடும்… புதிய பதவியும்…
பாஜ மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் நெல்லை மகாராஜநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் 2001ல் எம்எல்ஏவாகி அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட போதிலும் அந்த வாடகை வீட்டை மாற்றாமல், தொடர்ந்து வசித்து வந்தார். ராசியான வீடு என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. பின்னர் அருகிலேயே பல கோடி ரூபாய் செலவில் சொகுசு பங்களா கட்டி குடி பெயர்ந்தார். அதன் பிறகு நயினார் நாகேந்திரனுக்கு இறங்கு முகம். 2011ல் வெற்றி பெற்றும் மீண்டும் அமைச்சராக முடியவில்லை. இதனால் புதிய வீட்டின் ராசி சரியில்லை என்று மகாராஜநகர் பங்களாவை பல கோடிகளுக்கு விற்று விட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி அருகே புதிய பங்களா கட்டி குடி புகுந்தார். தற்போதும் இந்த புதிய பங்களாவில் வசித்து வரும் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் யோகம் அடித்துள்ளது.
The post ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவுக்கு ‘டாட்டா’ மதுபான அதிபர் டூ பாஜ தலைவர்: நயினார் நாகேந்திரன் கடந்து வந்த பாதை appeared first on Dinakaran.
