சென்னை: அதிமுக, பாஜ கூட்டணி பேச்சு தொடங்கிய நாளில் அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக திமுக அல்லது தவெக கூட்டணிக்கு செல்வது குறித்து நிர்வாகிகளிடம் ஓபன்னீர்செல்வம் கருத்துகளை கேட்டார். அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியே தகவல்களை கசிய விட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக தற்போது பல துண்டுகளாக உடைந்து காணப்படுகிறது. அந்த துண்டுகளை எல்லாம் ஒன்று சேர்க்க வேண்டும் என்று பாஜ விரும்புகிறது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ, பிரிந்தவர்கள் கூடினால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சப்படுகிறார். இதனால் பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்க அவர் விரும்பவில்லை.
இந்நிலையில், பாஜவை நம்பி இருந்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். அவர்களை பாஜ மேலிட தலைவர்கள் சமாதானப்படுத்தினர். பின்னர், எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து பிரிந்து சென்றவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதையும் எடப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடைசியாக பாஜ மேலிட தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தே ஆக வேண்டும் என்று கூறினர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, கட்சியில் சேர்க்க முடியாது. கூட்டணியில் இணைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் சீட் ஒதுக்குகிறோம். நீங்கள் அவர்களுக்கு பிரித்துக் கொடுங்கள் என்று கூறிவிட்டார்.
தொடர்ந்து தன்னை கட்சியில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்ததால், அவருக்கும் பாஜ தலைவர்களுக்கும் ஷாக் கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டார். பாஜ மேலிட பொறுப்பாளரான ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்து எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 60 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து, அதில் 40 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கூறினார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோருக்கு 20 தொகுதிகள் வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுதவிர கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், தன்னை அவமானப்படுத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுக்க நினைத்த பன்னீர்செல்வம், தன்னை கட்சியில் சேர்க்க மறுப்பதோடு, கூட்டணியில் மட்டுமே சேர்க்க முடியும் என்று பியூஸ்கோயலிடம் அனுமதி கொடுக்கும் நேரத்தில், தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது தனது ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் திமுக, தவெக கூட்டணியில் சேர வேண்டுமா? தனியாக கட்சித் தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டுமா அல்லது திமுக அல்லது தவெகவில் இணைய வேண்டுமா என்று கேள்விகளை கேட்டுள்ளார்.
அதில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பி மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோர் திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் அல்லது திமுகவில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததோடு, எழுதியும் கொடுத்துள்ளனர். ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மட்டும் தவெகவுடன் கூட்டணி சேர வேண்டும். தனியாக கட்சி நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இரு தரப்பும் சமமாக கருத்து தெரிவித்ததால், முடிவு ஓ.பன்னீர்செல்வம் எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அரசியல் தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை எந்த கஷ்டமும் படாமல் ஒன்றிய தலைவர் முதல் முதல்வர் வரை பதவியை பிடித்துள்ளார். பலர் கட்சியை ஆரம்பித்து எம்எல்ஏ கூட ஆக முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் பன்னீர்செல்வமோ எந்த கஷ்டமும் படவில்லை. பணமும் செலவு செய்யவில்லை. ஆனால் 3 முறை முதல்வராகிவிட்டார்.
இதனால் தற்போதும் பணம் செலவு செய்யாமல், பதவியை பிடிக்க விரும்பும் பன்னீர்செல்வம், திமுக கூட்டணியிலோ அல்லது திமுகவிலோ சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கூட்டணி பேச்சு முடியும் நேரத்தில் பன்னீர்செல்வம் அதிமுகவை தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாமா என்று கேட்டு எடப்பாடிக்கும், ஒன்றிய அரசுக்கும் ஷாக் கொடுத்துள்ளார். அதேநேரத்தில், பன்னீர்செல்வம் கூட்டணிக்கு வரக்கூடாது. அதேநேரத்தில் பாஜ, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிக சீட் கேட்கக் கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியே சில தகவல்களை நேற்று கசிய விட்டார்.
அதிமுகவுக்கு ஆதரவாக பிரமானியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறவர்கள் மூலமாக அதிமுக 170 தொகுதிகளில் போட்டி, பாமக, பாஜ 23 ெதாகுதிகளில் போட்டி, அமமுக 6, ஓபிஎஸ் 3 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டன. இந்த தகவல்களை பலரும் உறுதிப்படுத்தாமல் அப்படியே வெளியிட்டு விட்டனர். இதை கேள்விப்பட்டதும் பாஜ, பாமக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டிடிவி.தினகரன் இதை வெளிப்படையாகவே கூறிவிட்டார். பாமக செயல்தலைவரான ஜி.கே.மணியோ, எங்களை யாரும் இதுவரை கூட்டணிக்கு அழைக்கவில்லை. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை என்று கூறிவிட்டார்.
கூட்டணியே முடிவாகாதபோது எப்படி தொகுதிகளை ஒதுக்க முடியும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, திடீரென இதுபோன்ற ஒரு வதந்தியை தனது தேர்தல் யுக்தி தயாரிக்கும் நிறுவனம் மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். இந்த செய்தியே கூட்டணிக்குள் மேலும் குழப்பத்தை அதிகரித்து விட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ அதிமுகவுக்கு ஷாக் கொடுத்து கூட்டணி மாற அச்சாரம் போட்டுவிட்டார். அவரை தொடர்ந்து டிடிவியும் வெளியேறி திமுக அல்லது தவெக கூட்டணியில் ஐக்கியமாவார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நடவடிக்கையால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் விரக்தியும், பாஜ தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
