சட்டவரைவுக்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு காலவரம்பு நிர்ணயித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: கி.வீரமணி

சென்னை: சட்டவரைவிற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு காலவரம்பு நிர்ணயித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி! அனைவரின் உயர்தனிக் காவலராக உயர்ந்துவிட்டார் நமது முதலமைச்சர். கடந்த 8.4.2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றம் அதன் வரலாற்றுப் பெருமைமிக்க ஓர் அரிய, பெரிய, திருப்பு முனைத் தீர்ப்பான உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோர் வாசித்தளித்த தனிச் சிறப்புமிகு தீர்ப்பு (An Extraordinary Land Mark Judgement) உச்சநீதிமன்ற இணையத்தில் நேற்று (11.4.2025, இரவு 11.30 மணியளவில்) ஏற்றப்பட்டு (Upload) விட்டது. அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது!

அத்தீர்ப்பின்படி, தமிழ்நாடு ஆளுநரால் பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் என்றும், காலதாமதம் செய்யப்படும் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் ஏற்காது; இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு– 142 (Article)மூலம் செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு – தமிழ்நாடு அரசின் (சட்டத் துறை) அரசிதழில் இன்று (12.4.2025) காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி இனி தமிழ்நாடு முதலமைச்சரே பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர் பொறுப்பேற்று செயல்படும் உரிமை சட்ட வடிவம் பெற்றதோடு, அம்மசோதாக்கள் முந்தைய தேதியிட்டு செயலுக்கு வந்ததாகக் கொள்ளப்படும் என்பது தேனினும் இனிக்கும் சட்ட நடவடிக்கையாகும்.

இந்நிகழ்வின் மூலம் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் இன்று முதல் மாநில உரிமையின் ஒப்பற்ற காவலராக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தலைசிறந்த காவலராக, இந்திய ஜனநாயகத்தின் பெருமைக்குரிய காவலராக புகழின் உச்சத்திற்கே சென்றுள்ளார்! வரலாற்றில் இணைக்கப்பட்டுள்ள இந்த உரிமை வெற்றிப் பக்கத்திற்கு ஈடேது? இணையேது? மாநிலங்களின் உரிமை, ஊடகங்களின் கருத்துரிமை, ஜனநாயகப் போராளிகள் அனைவரின் உயர்தனிக் காவலராகவும் உயர்ந்துள்ளார்!இதற்கு மூலகாரணமான உச்சநீதிமன்ற நீதிபதிகள், வாதங்களை சிறப்பாக எடுத்துரைத்த ஆற்றல்மிக்க மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் அனைவருக்கும் கோடானு கோடி குடிமக்களின் நன்றி கலந்த பாராட்டுகள்!பெரியார் மண்ணின் பெருமையை மேலும் கூறவும் வேண்டுமோ! என தெரிவித்தார்.

 

The post சட்டவரைவுக்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு காலவரம்பு நிர்ணயித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: கி.வீரமணி appeared first on Dinakaran.

Related Stories: