சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் குற்றங்கள் குறைந்துள்ளது: காவல்துறை தகவல்

சென்னை: சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இப்போது ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது கிரிக்கெட் அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு வசதிகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர் கூறுகையில்,‘சென்னை சேப்பாக்கம் அரங்கம் முழுவதும் 252 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் ரசிகர்களின் செயல்பாடுகள், மைதானத்திற்கு வெளியே மற்றும் அதனை சுற்றி நடைபெறும் செயல்களை கண்காணிக்கிறோம். இந்த கண்காணிப்பு பணியில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஒவ்வொருவரையும், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். சந்தேகத்துக்குள்ளான நபரின் முகம் அல்லது உடையை அல்லது அதன் வண்ணத்தை வைத்தே அரங்கில் அவரின் முழு செயல்பாடுகளையும் பதிவுகள் மூலம் காணொளியாக பெற முடியும்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டத்தின் போது ஒரே நேரத்தில் 28க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருட்டுப் போனது. அந்த திருட்டுச் செயலில் ஈடுபட்ட கும்பலை விரைந்து கண்டுபிடிக்கவும் இந்த தொழில்நுட்பம் தான் உதவியாக இருந்தது. இன்னும் ஒரு கும்பலையும் ஓரிரு நாட்களில் கைது செய்வோம். இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அதன் மூலம் கடந்த சில ஆட்டங்களில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது,’என்றனர்.

The post சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் குற்றங்கள் குறைந்துள்ளது: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: