இது எனது ஊரு…எனது மைதானம்..! ஆட்டநாயகன் கே.எல்.ராகுல் ஹேப்பி

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நேற்றிரவு நடந்த 24வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பில் சால்ட் 17 பந்தில் 37, டிம் டேவிட் நாட் அவுட்டாக 20 பந்தில் 37 ரன் எடுத்தனர். கேப்டன் ரஜத் படிதார் 25, கோஹ்லி 22 ரன் அடித்தனர். டெல்லி பவுலிங்கில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில், டூபிளசிஸ் 2, மெக்கர்க், அபிஷேக் போரெல் தலா 17, கேப்டன் அக்சர் பட்டேல் 15 ரன்னில் வெளியேற கே.எல்.ராகுல் 53 பந்தில், 7 பவுண்டரி, 6 சிக்சருடன் 93 ரன் விளாசினார். அவருடன் நாட் அவுட்டாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன் அடித்தார்.

17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்த டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியான டெல்லிக்கு இது 4வது வெற்றியாகும். ஆர்சிபி 2வது தோல்வியை சந்தித்தது. கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் கூறுகையில், “3ல் வென்றதால் 4வது போட்டியிலும் அது சாத்தியமாகும் என நினைத்தோம். 19வது ஓவரை நான் வீசியது தவறு தான். ஆனாலும், வெற்றி பெற்றதால் அது பற்றி கவலை இல்லை. குல்தீப் நீண்ட காலமாகவே சிறப்பாக ஆடி வருகிறார். விப்ராஜ் நிகாமை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவர் 18வது ஓவரை வீசிய விதம் சிறப்பாக இருந்தது. ராகுல் பேட்டிங் வரிசையில் மேலே வருவதால் எனது வேலை எளிதாக மாறிவிட்டது.

அவர் பேட்டிங் வரிசையில் இடம் மாறிக்கொண்டு இருந்தாலும் அது அத்தனை எளிதல்ல. ராகுல் போன்ற வீரர் எங்கள் பேட்டிங் வரிசையில் இருப்பது சிறந்த விஷயம். அவர் இன்று முதிர்ச்சியான ஆட்டத்தை ஆடினார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்த பேட்டிங் பார்மை இங்கும் வெளிப்படுத்தி வருகிறார்” என்றார். ஆட்டநாயகன் கே.எல்.ராகுல் கூறுகையில், “இது சற்று வித்தியாசமான ஆடுகளம், ஆனால் எனக்கு உதவியது, 20 ஓவர் ஸ்டம்புக்குப் பின்னால் இருந்தது பிட்சை கணிக்க உதவியது. எனது ஷாட்டுகள் என்னவென்று எனக்குத் தெரியும், ஒரு நான் ஒரு பெரிய சிக்ஸர் அடிக்க விரும்பினால், எந்த இடத்தை குறிவைக்க வேண்டும் என்பது தெரியும். இது எனது மைதானம், எனது வீடு… இந்த ஆடுகளத்தை வேறு யாரையும் விட நன்றாக அறிவேன்’’ என்றார்.

The post இது எனது ஊரு…எனது மைதானம்..! ஆட்டநாயகன் கே.எல்.ராகுல் ஹேப்பி appeared first on Dinakaran.

Related Stories: