இந்த நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த நடைமுறை கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டம்காணத் தொடங்கியது. குறிப்பாக தமிழகத்தில் பன்வாரிலால் புரோகித் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பிறகு, துணை வேந்தர்களை தன் விருப்பப்படியே நியமனம் செய்வதில் அவர் குறியாக இருந்தார். அதன்படி முதலாவதாக அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமனம் செய்தார்.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக அவர் பொறுப்பேற்ற பிறகு பல்கலையின் அனைத்து நடவடிக்கைகளிலும் தலையிட்டு வந்தார். குறிப்பாக பொறியியல் கவுன்சலிங்கை நடத்தி வந்த அண்ணா பல்கலைக் கழகம், இனி கவுன்சலிங்கை நடத்தாது என்று அந்த நிர்வாக அமைப்பை சூரப்பா மாற்றினார். இதனால் மாநில உயர்கல்வித்துறைக்கும், துணை வேந்தர் சூரப்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றத் தொடங்கியது.
அதன்பின் சட்டப் பல்கலைக்கழகம் என்று தொடங்கி அனைத்து பல்கலைக் கழகங்களிலும் துணை வேந்தர் நியமனங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தன்னிச்சையாகவும், காலகாலமாக இருந்துவந்த நடைமுறைகளை மாற்றினார். அந்த ஆளுநர் மாற்றத்துக்கு பிறகு பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி அதே செயல்பாடுகளை தொடர்ந்தார். தமிழகத்தில் துணை வேந்தர்கள் நியமனங்கள் ஆளுநரின் விருப்பப்படியே நடந்தன. இந்நிலையில்தான் உச்சநீதி மன்றம் தற்போது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது என்பதை நாடே உணர தலைப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் பதவிகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக் கழக துணை வேந்தர், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆதரவு பெற்ற துணை வேந்தர், அந்த பல்கலையின் வளாகத்தில் சமயத்தலைவர்களின் பெயரில் பேரணி நடத்தியது, புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவது, பேராசிரியர் நியமனங்களில் பிரச்னை உருவாக்கியது என்று பல்வேறு குழப்பங்களை உருவாக்கினார்.
அதற்கு பிறகு துணை வேந்தர் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர் கொள்ள வசதியாக ஆளுநரே துணை நிற்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு அந்த துணை வேந்தர் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. இவை தவிர, சேலம் பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் தனியார் உதவியுடன் தொழில் தொடங்கி அதன் மூலம் ஊழல் நடக்க காரணமாக இருந்தார் என்றும் புகார் கூறப்பட்டது. அதைப்போல மேலும் சில பல்கலைக் கழகங்களில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் முறையில் நடந்து கொண்டதுடன், மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியதாக புகார்கள் உள்ளன.
அதே நேரத்தில், ஊட்டியில் கடந்த ஆண்டு ஆளுநர் தலைமையில் அனைத்து பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய துணை வேந்தர், அனைத்து துணை வேந்தர்களும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும் என்றும் ஆளுநரின் ஆலோசனைகளை ஏற்று நடக்க வேண்டும் என்று பேசினார். ஆளுநரின் பேச்சு துணை வேந்தர்கள் இடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியது. ஆளுநரின் பேச்சு மறைமுகமாக துணை வேந்தர்களை கட்டுப்படுத்தும் விதமாக இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினர். இருப்பினும், ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவு செய்ய செயல்பட்டு வருகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் தற்போது உச்சநீதி மன்றம், மாநில அரசின் பொறுப்பு மற்றும் அதற்கான அதிகாரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் செயல்படும் மாநில கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருப்பதற்கான சட்ட வாய்ப்புகள் உருவாகியுள்ளது. அதனால், தமிழக ஆளுநர்கள் மூலம் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் பதவி என்ன ஆகும்? அவர்கள் தாங்களே முன்வந்து பதவி விலகினால் நல்லது என்று கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
* சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆதரவு பெற்ற துணை வேந்தர். அந்த பல்கலையின் வளாகத்தில் சமயத்தலைவர்களின் பெயரில் பேரணி நடத்தியது, புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவது, பெரியார், உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களை நீக்கிவிட்டு, சமயச்சின்னங்கள் கொண்ட படங்களை அமைத்தது, பேராசிரியர் நியமனங்களில் பிரச்னை உருவாக்கியது என்று பல்வேறு குழப்பங்களை உருவாக்கினார். பெரியார் பல்கலைக் கழக வளாகத்தில் தனியார் உதவியுடன் தொழில் தொடங்கி அதன் மூலம் ஊழல் நடக்க காரணமாக இருந்தார் என்றும் புகார் கூறப்பட்டது.
The post உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு எதிரொலி ஆளுநர் ஆர்.என்.ரவியால் நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள் பதவி தப்புமா? appeared first on Dinakaran.