பவானி : பவானி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1.32 கோடியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள், பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.மேட்டூர் – ஈரோடு வழித்தடத்தில் மிக முக்கிய நகராகவும், கோயில் நகராகவும் பவானி விளங்கி வருகிறது.
தினமும் இங்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் பஸ் நிலைய விரிவாக்கம் அவசியமானதாக கருதப்பட்டது. இதில், நகரப் பேருந்துகள் நிற்கும் பகுதி மற்றும் தனியார், தொலைதூர பேருந்துகள் நிற்கும் பகுதி என 28 பஸ்கள் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இரு பிரிவுகளாக கட்டப்பட்டது.
இரு புறங்களிலும் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும் வகையில் 43 கடைகள் கட்டப்பட்டன. கட்டணக் கழிப்பிடம், இலவச கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. பஸ் நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, அம்மா உணவகம் ஆகியன தொடங்கப்பட்டன.
இங்கிருந்து, கோவை, மேட்டூர், சேலம், ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூர், வேளாங்கன்னி உட்பட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேட்டூர் – ஈரோடு, கோவை வழித்தடத்தில் தொலைதூர பேருந்துகள் பஸ் நிலையத்தில் வந்து செல்கின்றன.
இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு, 32 வருடங்களானதால் பஸ் நிலையத்தின் மேற்கூரை, கடைகளின் மேல்தளம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், மழை காலங்களில் கடைகளுக்குள் தண்ணீர் கசிந்து வந்தது.
பஸ் நிலைய கட்டுமானங்கள் வலுவிழந்து காணப்படுவதோடு, மழைக்காலங்களில் பயணிகள் அவதிக்குள்ளாகும் நிலை காணப்பட்டது. எனவே, அனைத்து வசதிகளுடன் பவானி புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை மானிய நிதி ரூ.82 லட்சம், பஸ் நிலைய கட்டிடங்கள் மேம்பாடு செய்ய ஒதுக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் தண்ணீர் கசியாமல் இருக்கும் வகையில் தள ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகளில் கழிவுநீர் வெளியேறும் வகையில் தனியே கான்கிரீட் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகளிலும் சேதமான தரைத்தளம் அகற்றப்பட்டு, டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிடங்களில் சேதமான பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு, சீரமைக்கப்படுகிறது. பஸ் நிலையத்தில் சுற்றுச்சுவர் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள கட்டண கழிப்பிடத்திற்கு மாற்றாக, பஸ் நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் கழிப்பறை, குளியலறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
தற்போது 60 சதவீத மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாக்கியுள்ள பணிகளும் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் கூறுகையில், ‘‘பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பவானி புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகளிர் விடியல் பயணம் திட்டத்தை போன்று, புதிய பஸ் நிலைய மேம்பாட்டு பணியும் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றார்.
The post 32 வருடங்களுக்கு பிறகு பவானி புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.32 கோடியில் மேம்பாட்டு பணிகள் appeared first on Dinakaran.