ராமநாதபுரம், ஏப்.9: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் 500க்கும் மேற்பட்டோர், தமிழக வைகை பாசன விவசாய சங்க தலைவர் பாக்கியநாதன் தலைமையில் ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு இருந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு பேரணியாக சென்றனர்.
அப்போது ரயில் நிலையம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு ஒன்றிய அரசை கண்டித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும், தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில் 100 சதவீதம் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும்.
இதனை போன்று பாதிக்கப்பட்ட மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீதம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ரயில் நிலையம் சென்று ரயிலை மறிக்க முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார், கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 338 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்: 338 விவசாயிகள் கைது appeared first on Dinakaran.