சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கே.என்.ரவிச்சந்திரனின் டிவிஎச் எனர்ஜி ரிசோர்சஸ் நிறுவனம், அவரது வீடு மற்றும் அருண் நேருவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள ஜிஎஸ்என்ஆர் ரைஸ் இண்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள பிரகாஷ் என்பவரின் வீடு, அடையாறு காந்தி நகர், சாஸ்திரி நகர் உள்பட சென்னையில் 7 இடங்களில் 2வது நாளாக சோதனை நடந்தது.
கே.என்.ரவிச்சந்திரனிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று பிற்பகல் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மட்டும், தனியாக காரில் ஆயிரம்விளக்கில் உள்ள தங்களது மண்டல அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். டிவிஎச் எனர்ஜி ரிசோர்சஸ் நிறுவனம் வங்கி ஒன்றில் ரூ.30 கோடி கடன் வாங்கியதாகவும், அந்த பணத்தை 3 நிறுவனம் மூலம் டிவிஎச் நிறுவனங்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கடன் கொடுத்த சம்பந்தப்பட்ட வங்கி அளித்த புகாரின்படி 2021ல் சிபிஐ இந்த மோசடி தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தொழிலதிபர்களான இளையராஜா, தமிழ்மாறன், அறிவுநிதி இயக்குநர்களாக உள்ள ‘ட்ரு டாம்’ என்ற நிறுவனத்தின் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் சைதாப்பேட்டை சிஐடி நகரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. இந்த நிறுவனம் கடந்த 2013ல் திருப்பூரில் காற்றாலை அமைக்க வங்கியில் ரூ.22.48 கோடி கடன் பெற, டிவிஎச் கட்டுமான நிறுவனம் சார்பில் கே.என்.ரவிச்சந்திரன் உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளார். கடன் தொகை உள்பட மொத்தம் ரூ.30 கோடி வரை டிவிஎச் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் தான் சிபிஐ 2021ல் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தான் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அலுவலகத்திற்கு அழைத்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வாக்குமூலமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
The post அமைச்சரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை: சென்னையில் 2வது நாளாக நீடித்தது appeared first on Dinakaran.