நிர்மலா சீதாராமனை ஓட்டலில் சந்தித்துப் பேசிய நிலையில் அண்ணாமலையுடன் சீமான் மீண்டும் சந்திப்பு: பாஜ கூட்டணியில் சேரத் திட்டமா?

சென்னை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில், அண்ணாமலையை நேற்று தனியார் கல்லூரியில் சீமான் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் பாஜ கூட்டணியில் செல்வாரா அல்லது பாஜ உத்தரவுப்படி தனது தேர்தல் வியூகத்தை வகுப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கப்போவதாக அறிவித்து செயல்பட்டு வருபவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும் தன்னை தமிழ் பற்றாளர் என்றே கட்டிக் கொண்டு வந்தார். இதனால் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை ஆதரித்து தீவிரமாக செயல்பட்டு வரும் பாஜவை கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே தன்னை பாஜ ஆதரவாளர் போல காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். பாஜவை ஆதரித்தும், இந்துத்துவாவை ஆதரித்தும் பேசத் தொடங்கினார்.

அதற்காக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரையும் தாக்கத் தொடங்கினார். இதனால் அவர் பாஜ ஆதரவாளராகவே மாறிவிட்டார் என்று அவரது கட்சியினரே பேசத் தொடங்கியதோடு தமிழகத்தில் பல இடங்களில் கட்சியை கூண்டோடு கலைத்து விட்டு மாற்று கட்சிகளில் இணையத் தொடங்கினர்.

இந்தநிலையில்தான் கடந்த சனிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 8.15 மணி முதல் 8.45 மணி வரை சுமார் 30 நிமிடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் பாஜ கூட்டணியில் உள்ள பாரிவேந்தர் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு சீமானும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் சென்றிருந்தனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை பாரிவேந்தர் நடத்தியாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக கல்லூரியில் உள்ள ஒரு அறையில் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே இருவரும் ஒன்றாக மேடை ஏறினர். அந்த நிகழ்ச்சியில், அண்ணாமலை சீமானைப் புகழ்வதும், சீமான் அண்ணாமலையை புகழ்வதும் ஒன்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து தள்ளினர். இந்த இரு நிகழ்ச்சிகள் மூலம் அவர் பாஜ ஆதரவாளர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்களே ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பாஜ கூட்டணியில் சீமான் இணைவாரா அல்லது அவர்களது உத்தரவுப்படி தனது தேர்தல் வியூகத்தை வகுப்பாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

The post நிர்மலா சீதாராமனை ஓட்டலில் சந்தித்துப் பேசிய நிலையில் அண்ணாமலையுடன் சீமான் மீண்டும் சந்திப்பு: பாஜ கூட்டணியில் சேரத் திட்டமா? appeared first on Dinakaran.

Related Stories: