அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ம் தேதி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீத கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது. இது நாளை நடைமுறைக்கு வருகிறது. சீனாவுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதில் எந்த நட்பு நாட்டையும், எதிரி நாட்டையும் அமெரிக்கா விட்டுவைக்கவில்லை. அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34 சதவீத பதில் வரியை விதித்தது. அதுமட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சோளம், கோழி, எலும்பியல் இறக்குமதிகளை நிறுத்தியது. கனிமங்களுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது.
சீனாவின் இந்த பதில் நடவடிக்கை, உலகளாவிய வர்த்தக யுத்தத்தை தீவிரமாக்கும் வகையில் உள்ளது. இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து நேற்று உலகளாவிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை கண்டன. இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடனே வர்த்தகத்தை தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 3,939.68 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்தது. நிப்டி 1,160.8 புள்ளிகள் வரை சரிந்தது. 13 முக்கிய துறைகளை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் மளமளவென இறங்கின. அமெரிக்காவிடம் இருந்து பெரும் வருவாய் ஈட்டும் ஐடி நிறுவனங்களின் பங்குகளும் 2.5 சதவீதம் வீழ்ச்சியை கண்டன. வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்களின் பங்குகள் பின்னடைவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி வரையிலும் இழப்பு ஏற்பட்டது. மாலையில் வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தை 2,227 புள்ளிகள் சரிந்து (2.95%) 73,137.90 புள்ளிகளும், நிப்டி 742.85 புள்ளிகள் (3.24%) சரிந்து 22,161.60 ஆகவும் இருந்தன. இது 10 மாதத்தில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி.
இதே போல ஆசியா, ஐரோப்பாவில் பல நாடுகளிலும் பங்குச்சந்தைகள் கறுப்பு திங்களாகவே அமைந்தது. ஐரோப்பிய பங்குச்சந்தை 6 சதவீதம் வீழ்ச்சி கண்டது. ஆசியாவின் ஹாங்காங் பங்குச்சந்தை 13 சதவீதமும், ஜப்பான் பங்குச்சந்தை 8 சதவீதமும், சீனா 7 சதவீதமும், தென் கொரியா 5 சதவீதமும், தைவான் 10 சதவீதமும், சிங்கப்பூர் 8.5 சதவீதமும் வீழ்ச்சி கண்டன. பாகிஸ்தானில் 5 சதவீத வீழ்ச்சியை தொடர்ந்து பங்குகள் வர்த்தகம் சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலியா 15 மாதத்தில் இல்லாத அளவுக்கு 6.3 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளின் பங்குச்சந்தைகளும் வீழ்ச்சி அடைந்தன. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை 6 சதவீத சரிவை சந்தித்திருந்தது.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய இந்த 2 நாட்களில் உலகளவில் பங்குச்சந்தையில் ரூ.780 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது 2008ல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி நிலைக்கு இணையானது. பங்குச்சந்தை வீழ்ச்சியால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3.61 சதவீதம் சரிந்து 63.21 அமெரிக்க டாலராக விற்பனையானது. இந்த வர்த்தக யுத்தம் காரணமாக, அமெரிக்காவில் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்பட 20 சதவீதமாக இருந்த வாய்ப்பு தற்போது 45 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளது. இது உலக நாடுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்த வர்த்தக நிச்சயமற்ற சூழலால் சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 சதவீதம் வரை குறையும் என கணித்துள்ளது. இது உலகளவில் அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
மோடியை காணவில்லை; ராகுல் காந்தி விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘டிரம்ப் மாயையை காட்டி விட்டார். அதன் யதார்த்தம் மிகத் தீவிரமாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடியை தான் எங்கும் காணவில்லை. இந்தியா இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மீள்தன்மை மற்றும் அனைத்து இந்தியர்களுக்கும் பலனளிக்கக் கூடிய உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதை தவிர நமக்கு வேறு வழியில்லை’’ என கூறி உள்ளார்.
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ்தள பதிவில், ‘‘ஒரே நாளில் பங்குச்சந்தையில் ரூ.19 லட்சம் கோடி இழப்பு என்பது பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படுவதற்கான அறிகுறி. பாஜ அரசு பணவீக்கம் மற்றும் ஊழலால் மட்டுமல்ல, பங்குச் சந்தையின் பெரும் சரிவின் மூலமாகவும் மக்களின் பாக்கெட்களை காலி செய்துள்ளது’’ என்றார்.
ஒருதலைபட்சமான வரி; சீனா கடும் கண்டனம்
சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அளித்த பேட்டியில், ‘‘சர்வதேச விதிகளின் மீது அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் கொள்கையை திணிப்பது உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகிச் சங்கிலியின் ஸ்திரத்தன்மையை பாதிக்கிறது. மேலும் உலக பொருளாதார மீட்சியை கடுமையாக பாதிக்கிறது. அமெரிக்காவுக்கு எப்படிப்பட்ட பதிலடி தர வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான வலிமையையும் நாங்கள் கொண்டுள்ளோம். அழுத்தம், அச்சுறுத்தல்கள் சீனாவை கையாள்வதற்கான வழி அல்ல. சீனா தனது நியாயமான உரிமைகள், நலன்களை உறுதியாக பாதுகாக்கும். அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்பு ஒருதலைப்பட்சமானது, உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்கான நியாயமற்ற வழி மற்றும் பொருளாதாரத்தை சீரழிப்பதாகும்’’ என்றார். அதே சமயம், டெஸ்லா உள்ளிட்ட 20 அமெரிக்க நிறுவனங்களுடன் லிங் ஜியான் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமென்றும், வெளிநாட்டு முதலீடுகளுக்காக சீனாவின் கதவும் திறந்திருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
என்ன நடந்தாலும் பின்வாங்க மாட்டேன்
உலக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘உலக சந்தைகள் வீழ்ச்சி அடைவதை நான் விரும்பவில்லை. அதே சமயம் வர்த்தகத்தை பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. ஏனென்றால் நோய் குணமாக மருந்து எடுத்துக் கொள்வது அவசியம். ஐரோப்பா, ஆசியா என பல உலக தலைவர்களுடன் பேசினேன். அவர்கள் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள். எங்கள் தரப்பில் எந்த வர்த்தக பற்றாக்குறையையும் நாங்கள் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் பற்றக்குறை ஏற்படுத்துவது எங்களுக்கும் இழப்பாக இருக்கும். ஆனாலும் வரி விஷயத்தில் என்ன நடந்தாலும் பின்வாங்கப் போவதில்லை’’ என்றார்.
பேச்சுவார்த்தைக்கு செல்லும் நாடுகள்
அமெரிக்கா விதித்த வரியிலிருந்து தப்பிக்க, அதிபர் டிரம்ப் நிர்வாகத்துடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பல உலக நாடுகள் விரைந்துள்ளன. இஸ்ரேலுக்கு 17 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி டிரம்புடன் பேச இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெள்ளை மாளிகைக்கு செல்ல இருக்கிறார். இதே போல வியட்நாமும் வர்த்தக அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளது. ஜெர்மனி, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன. ஆனால், பரஸ்பர வரி விதிப்புக்கு முன் 1 மாதம் அவகாசம் கொடுத்த டிரம்ப், ஏப்ரல் 2ம் தேதிக்குப் பிறகு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தது.
The post அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் உலகளவில் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி: இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.