வரலாறு காணாத புதிய உச்சம் பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: ஒரே நாளில் ரூ.1,485 உயர்ந்தது- நடுத்தர மக்கள் அதிர்ச்சி

சென்னை: வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,485 உயர்ந்ததால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 9ம்தேதி கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8290க்கும், பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கம் விலை 9ம்தேதி மதியம் 2வது முறையாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410-க்கும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.67,280-க்கும் விற்பனையானது.

10ம்தேதி கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.8,560-க்கும், பவுனுக்கு ரூ.1200 உயர்ந்து ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து தங்கநகை விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் கெடுபிடிகளை சமாளிக்க அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருந்த சீனா அவற்றையெல்லாம் விற்றுவிட்டு தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் தேவை சர்வதேச அளவில் அதிகரித்து விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது’’ என்றனர். இனி வரும்காலங்களிலும் தங்கம் விலை உயருவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

The post வரலாறு காணாத புதிய உச்சம் பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை: ஒரே நாளில் ரூ.1,485 உயர்ந்தது- நடுத்தர மக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: