கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்தார்.
இதன்படி, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகன, தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கலாம்.
2020 மே மாதத்துக்குப் பிறகு, முதல் முறையாக கடந்த பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது. தற்போது இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு 27 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும். நடப்பு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும். சில்லறை விலை பண வீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நகைக் கடன்களுக்கு வரைவு விதிகள் வெளியீடு
நகைக் கடன்களுக்கு புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, நகைக்கடன் வழங்குவதற்காக நகையின் தூய்மையை பரிசோதித்தலில் நிலையான நடைமுறை வங்கியின் அனைத்து கிளைகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கடன் வழங்கும்போது அடமான நகையை மதிப்பிடும்போது கடன் பெறுபவர் அங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக கல் எடை தொடர்பான விவரங்கள் கடன் பெறுபவருக்கு விளக்கப்பட்டு, ஆவணங்களில் விவரங்கள் இணைத்து வழங்க வேண்டும். கடன் ஒப்பந்தத்தில் அடமான நகை பற்றிய விவரம், அடமான மதிப்பு, ஏல நடைமுறை விவரங்கள் மற்றும் தங்க அடமானத்தை ஏலம் விடுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள், ,ஏலம் நடத்தப்படுவதற்கு முன்பு கடனை திருப்பிச் செலுத்துதல் அல்லது செட்டில்மென்ட் செய்ய கடன் அனுமதிக்கப்பட வேண்டிய அறிவிப்பு காலம் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய விவரங்கள் அனைத்தும் பிராந்திய மொழியில் அல்லது கடன் பெறுபவர் தேர்வு செய்யும் மொழியில் இடம் பெற்றிருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடன் வட்டியை குறைத்த வங்கிகள்
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி ஆகியவை கடன் வட்டியை கால் சதவீதம் குறைத்துள்ளன. இதன்படி ரெப்போ அடிப்படையிலான கடன் வட்டி 9.1 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல் யூகோ வங்கி கடன் வட்டியை 8.8 சதவீதமாக குறைத்துள்ளது.
The post வீடு, வாகன கடன் வட்டி குறையும்; குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.25% குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.