சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாதம் பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.68,080 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர் ஏற்றத்திற்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு பவுன் ரூ.67,200க்கு விற்பனையானது.
தொடர்ந்து 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.66,480க்கு விற்பனையானது. இதையடுத்து வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, கிராம் ரூ.8,285க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து சவரன் ரூ.66,280 க்கும் விற்பனையானது. நேற்று மேலும் தங்கத்தின் விலை சரிவை கண்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 70 டாலர் அதிகரித்ததை அடுத்து இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.65ம் பவுனுக்கு ரூ.520ம் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.66,320க்கு விற்பனையானது. மீண்டும் மலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8410-க்கும் சவரன் ரூ.67,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் ஒரே நாளில் ரூ.1,480 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது
The post இரண்டாம் முறையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்ததால் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! appeared first on Dinakaran.