பிரதமர் மோடி மதுரை வரவேற்பில் எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி மிஸ்சிங்

அவனியாபுரம்: மதுரையில் பிரதமர் மோடி வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 4.40 மணிக்கு வந்தடைந்தார். மதுரை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், கலெக்டர் சங்கீதா, மதுரை நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராமஸ்ரீனிவாசன், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் 28 பாஜ நிர்வாகிகள் என மொத்தம் 35 பேர் வரவேற்றனர்.

மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் சந்திக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இவர்களது பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. டிடிவி.தினகரன் மதுரையில் இருந்தும் சந்திக்க முடியவில்லை. ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளத்தில் காத்திருந்தும் அழைப்பு வரவில்லை. இதுகுறித்து பாஜ நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘விரைவில் அமித்ஷா சென்னை வர உள்ள நிலையில் அங்கு வைத்து அனைவரையும் சந்தித்து கொள்ளலாம் என பாஜ தலைமை முடிவெடுத்துள்ளது. எனவேதான் அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை’’ என்றனர்.

* விருதுநகர் எம்பி புறக்கணிப்பு
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து விட்டு, மதுரை வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் பட்டியலில், மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவரும், விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் பெயரும் இருந்தது. ஆனால் வக்பு வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் வரவேற்பில் மாணிக்கம் தாகூர் எம்பி பங்கேற்காமல் புறக்கணித்ததாக தெரிகிறது.

The post பிரதமர் மோடி மதுரை வரவேற்பில் எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி மிஸ்சிங் appeared first on Dinakaran.

Related Stories: