வடுகபட்டியில் ரூ.3 கோடியில் மஞ்சள் சிறப்பு மையம் கட்டுமான பணி தீவிரம்

மொடக்குறிச்சி: வடுகபட்டி அருகே உள்ள வினோபா நகரில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் மஞ்சள் சிறப்பு மையம் கட்டுமானப் பணிகள் முடிந்து இன்னும் 6 மாத காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, அனுமன்பள்ளி, சிவகிரி, கொடுமுடி, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் மஞ்சள்களை ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டில் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் மஞ்சள் உற்பத்தி செய்யும் பகுதியான மொடக்குறிச்சி,கொடுமுடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2018-2019ம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் சிறப்பு மையம் அமைப்பதற்காக இடத்தை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இதில் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடுகபட்டி பேரூராட்சியில் வினோபா நகரில் பூமிதான இயக்கத்தில் உள்ள 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யபட்டது. பின்னர் அரசுக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து அனுப்பி இந்த இடத்தில் மஞ்சள் சிறப்பு மையம் அமைக்க முடிவு செய்தனர்.அதனைத் தொடர்ந்து மஞ்சள் சிறப்பு மையம் அமைப்பதற்கான 10 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலைத் துறையினர் கையப்படுத்தினர். பின்னர் வேளாண்மை துறை பொறியியல் துறையின் சார்பில் கடந்த 2023 ஆண்டு நவம்பர் மாதம் பூமி பூஜையிட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது.

இந்த மஞ்சள் சிறப்பு மையத்தில் ஐந்து ஏக்கர் அலுவலக பயன்பாடு மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது மஞ்சள் காய வைத்தல் போன்ற அலுவலக பயன்பாட்டிற்கும். மீதமுள்ள ஐந்து ஏக்கரில் மஞ்சளின் உள்ள ரகங்களில் அதிக அளவில் குர்குமின் உள்ள ரகங்களை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விதை முதல் அறுவடை வரை வரையான விளைச்சல்களை விளைவித்து அதில் குர்க்குமின் அதிகம் உள்ள ரகங்களை கண்டறிந்து அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது, மேலும் மகசூல் அதிகம் உள்ள ரகங்களை கண்டறிவது போன்ற வகையான பயன்பாட்டிற்கு ஐந்து ஏக்கர் நிலம் என இந்த ஆராய்ச்சி மஞ்சள் சிறப்பு மையம் பயன்படுத்தப்பட உள்ளது.
தற்போது அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் மஞ்சள் காய வைப்பதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் விதை அறுவடை வரை உள்ள பயன்பாட்டிற்கு குடோன்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவுற்று விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி கூறும்போது: மஞ்சள் சிறப்பு மையத்தில் மஞ்சள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும் மஞ்சளில் உயர்ந்த தரத்தை கொண்டு வரவும் மஞ்சள் திடல் மற்றும் பிடிஎஸ் 8, 10 ஈரோடு லோக்கல்,சேலம் லோக்கல் போன்றவற்றின் சாகுபடிகளை அதிகரிக்கவும் செயல் விளக்க திடல் அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி மையம் அமைத்திடவும் திட்டமிடப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் மஞ்சளுக்கு இயற்கை இடுபொருட்கள் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் பயிர் நடவு முதல் அறுவடை வரையிலும்,அறுவடைக்கு பின்னர் பாலிஷ் செய்யும் இயந்திரங்கள் மூலம் செயல் விளக்கம் அமைப்பது உள்ளிட்ட மஞ்சள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான செயல்களுக்கும் இந்த மஞ்சள் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது அலுவலக கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் மஞ்சளைக் கொட்டி காய வைப்பதற்கான களம் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் முடிந்து இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

 

The post வடுகபட்டியில் ரூ.3 கோடியில் மஞ்சள் சிறப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: