பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.84.76 கோடி செலவில் 326 நூலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.84.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ரூ.213 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு 2023-24ம் ஆண்டில் மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டிடம் கட்டுதல் / தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.213 கோடியே 46 லட்சம் அனுமதிக்கப்பட்டது. இதில் ஒரு நூலகக் கட்டிடம் 500 சதுர அடி பரப்பளவில் 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழியாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 246 நூலகங்களும், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 44 நூலகங்களும், நகராட்சி நிர்வாகத் துறை (நகராட்சி) மூலம் 28 நூலகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 8 நூலகங்கள், என அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 71 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவிலான நூலகக் கட்டிடங்கள், 6 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 4 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 1 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள், என மொத்தம் 84 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்தரமோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பொது நூலக இயக்ககத்தின் சார்பில் ரூ.84.76 கோடி செலவில் 326 நூலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: