துறையூர்: திருச்சி அருகே இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் வெடி விபத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது தாயார் ராஜமணி (80), வயது மூப்பு காரணமாக நேற்றுமுன்தினம் இறந்து விட்டார். நேற்று மாலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் மலர் தூவி பட்டாசு வெடித்தவாறு சென்றனர். தேர் திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் பாதுகாப்பு இன்றி பெரிய வெடியை வெடித்த போது, அதில் இருந்து நாலா புறமும் தீப்பொறி பறந்து சிதறியது.
இந்த தீப்பொறியில் சிக்கி அதே கிராமத்தை சேர்ந்த தர் (21), சேவகன் (68), சரவணன் (50), கார்த்திக் (25), தீனா (38) உள்ளிட்ட 17 பேர் பலத்த காயமடைந்தனர். அனைவரும் துறையூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தர் (21) உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலிபுரம் போலீசார் வழக்கு பதிந்து வெடி உரிய லைசென்ஸ் உள்ள கடையில் இருந்து வாங்கியதா? அல்லது நாட்டு வெடி வெடிக்கப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர்.
The post இறுதி ஊர்வலத்தில் வெடி விபத்து; வாலிபர் பலி: 16 பேர் படுகாயம் appeared first on Dinakaran.