குளத்தூரில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர்

*கால்வாய்களை அகலப்படுத்த கோரிக்கை

குளத்தூர் : குளத்தூரில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இப்பகுதியில் கால்வாய்களை அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தெரு, தெற்கு தெரு, வடக்கு தெரு பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக கிழக்கு பகுதியில் உள்ள முத்துமாலையம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த சிப்பிகுளம் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கலக்கிறது.

தினமும் 3 பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் எப்போதும் மடை திறந்த வெள்ளநீர் போல் கிழக்கு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக செல்கிறது. முத்துமாலையம்மன் கோயில் பகுதியில் உள்ள கால்வாய்கள் சிறிதாக இருப்பதால் அடிக்கடி அப்பகுதியில் குப்பையும் கொட்டப்படுவதால் கழிவுநீர் தேங்கி அடைத்துக் கொள்கிறது.

இதனால் அப்பகுதியில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு கழிவுநீரை மிதித்து தான் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக இப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்களுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இந்த கால்வாய்களை அகலப்படுத்தவோ, கழிவுநீரை அப்புறப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர்.

எனவே கழிவுநீரை அகற்றவும், கழிவுநீர் தேங்காதவாறு செல்ல கால்வாய்களை அகலப்படுத்தவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குளத்தூரில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Related Stories: