அதிமுக-பாஜ இணைப்புக்கு திமுக தடையாக இருக்கிறதா? அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பரமத்தி வேலூர் எஸ்.சேகர் (அதிமுக) பேசியதாவது: காவேரி ஆற்றின் குறுக்கே, பிலிக்கல்பாளையம் முதல் கொடுமுடி வரை உயர்மட்ட பாலம் கட்டுவது தாமதமாகிறது. இதற்கு காரணமாக, இப்பகுதி மக்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், நான் அதிமுக எம்எல்ஏவாக இருப்பதாலும், காவேரியின் அக்கரையில் மொடக்குறிச்சி தொகுதி பாஜ எம்எல்ஏவாக இருப்பதாலும், இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உட்பட்ட இணைப்பு உயர்மட்ட பாலம் அமைத்திட அரசு தயங்குகிறதோ என்று அந்தப் பகுதி மக்கள் பரவலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் துரைமுருகன்: உறுப்பினர் ஏதோ அரசியல் கண்ணோட்டத்தோடு நாங்கள் செய்யாமல் இருக்கிறோம் என்கிறார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: ஆற்றுக்கு இக்கரையிலே அதிமுகவும், அக்கரையில் பாஜவும் இருக்கிறது. இது இரண்டையும் இணைப்பதற்கு ஏதோ நாங்கள் தடையாக இருப்பது போல சொல்கிறீர்களே, அது உங்கள் பாடு, நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே நீங்கள் அதில் தீவிரமாக இருக்கிறீர்கள். அது அப்படி இருக்கிறதா என்பதை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். (அதிமுக- பாஜ இணைப்புக்கு திமுக தடையாக இருக்கிறதா? என்று மறைமுகமாக அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது)

The post அதிமுக-பாஜ இணைப்புக்கு திமுக தடையாக இருக்கிறதா? அமைச்சர் பேச்சால் சிரிப்பலை appeared first on Dinakaran.

Related Stories: