ஈரோடு, ஏப்.3: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த மாதம் ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர். சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 154 கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டதில் 41 கடைகளில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.
இதேபோல் பொட்டல்பொருட்கள் விதிகளின்படி 29 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் 7 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது. குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர்கள், கொத்தடிமை ஒழிப்பு, குறைந்த பட்ச ஊதியம் வழங்குதல் சட்டப்படி 59 தோட்டங்கள், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் நடக்கும் இடங்களில் நடந்த ஆய்வில் முரண்பாடு காணப்படவில்லை. முரண்பாடு கண்டறியப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர்.
இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையாளர் ஜெயலட்சுமி கூறியதாவது: எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது தண்டனைக்குறியதாகும். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தினை வழங்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post குழந்தைகளை பணியமர்த்தினால் கடும் நடவடிக்கை: தனியார் நிறுவனத்திற்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.