அந்தியூர் சக்தி மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டியுடன் பூசாரி அங்கபிரதட்சணம்

அந்தியூர், ஏப்.3: அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் விராலி காட்டூர் பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று பொங்கல் திருவிழா நடந்தது. இதில் முன்னதாக கோயிலின் முன்பு நடப்பட்ட கம்பத்தில் அக்னி கரகம் வைக்கப்பட்டு அதில் தீ மூட்டப்பட்டது.

பின்னர் பூசாரி அந்த அக்னி சட்டியை வயிற்றில் வைத்துக் கொண்டும், மத்தளம் அடிப்பவர் மத்தளத்தை வயிற்றில் வைத்துக் கொண்டும் படுத்தபடி கோயிலை சுற்றி வலம் வந்தனர். ஆண்டுதோறும் இதுபோன்ற நேர்த்திக்கடனை பூசாரி மற்றும் மத்தளம் அடிப்பவர் தொடர்ந்து செய்து வருகின்றனர். இப்படி செய்வதால் ஊர் மக்கள் நோய் நொடியின்றி செல்வ செழிப்புடன் வாழ்வர் என்பது ஐதீகம் என்று ஊர்மக்கள் தெரிவித்தனர்.

The post அந்தியூர் சக்தி மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டியுடன் பூசாரி அங்கபிரதட்சணம் appeared first on Dinakaran.

Related Stories: