இந்நிலையில் சட்டசபை தேர்தலை காரணம் காட்டி அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜ விரும்பியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்காமல் இருந்தார். இந்நிலையில்தான், அவரது உறவினர் ராமலிங்கம் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.650 கோடி வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்தது. இதை காரணமாக வைத்து எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து பேசிய அமித்ஷா, பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிபந்தனைக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்த எடப்பாடி, முன்னாள் நிர்வாகிகளை சேர்க்க மறுத்து வருகிறார். இதன் காரணமாக, எடப்பாடி பழனிசாமியுடன் கடந்த சில நாட்களாக மோதும் செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அமித்ஷாவையும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுகவை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வருகிற 6ம் தேதி ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை மதுரை விமானநிலையத்தில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மோடியே நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இதற்கிடையே, டெல்லியில் இருந்த தம்பிதுரை, திடீரென நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அதேநேரத்தில் சி.வி.சண்முகம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த இரு சந்திப்புகளின்போதும் ஒருங்கிணைந்த அதிமுகவுடன்தான் பாஜ கூட்டணி அமைக்கும். அதற்கு எடப்பாடி பழனிசாமி இடையூறாக இருந்தால், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடுத்து விட்டு புதியவரை பொதுச் செயலாளராக போட்டு, அவர்களுடன் பாஜ கூட்டணி அமைக்கும் என்று இரு ஒன்றிய அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் தங்கியிருந்த 2 எம்பிக்களும், ஒன்றிய அமைச்சர்களை சந்தித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜவின் அதிரடி நடவடிக்கைகளால் அதிமுக என்ற கட்சி எவ்வளவு நாளுக்கு நீடிக்கும் என்று அதிமுக தொண்டர்களே கடும் விரக்தியடைந்துள்ளனர்.
The post செங்கோட்டையனை தொடர்ந்து தம்பிதுரை, சி.வி.சண்முகத்துடன் நிர்மலா, அமித்ஷா திடீர் சந்திப்பு: அதிமுகவை உடைக்கும் வேலையை தொடங்கியதா பாஜ appeared first on Dinakaran.
