ஐபிஎல் 18வது சீசனின் 10வது லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இதில், சன்ரைசர்ஸ், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரின் 5வது பந்தில், அபிஷேக் சர்மா (1 ரன்) ரன் அவுட்டானார். அதையடுத்து, நடப்புத் தொடரில் முதல் சதம் விளாசிய அதிரடி வீரர் இஷான் கிஷண் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 20 ஆக இருந்தபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில், ஸ்டப்சிடம் கேட்ச் தந்து, 2வது விக்கெட்டாக இஷான் கிஷண் (2 ரன்) வெளியேறினார்.
பின், நிதிஷ் குமார் ரெட்டி உள் வந்தார். 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிதிஷ், ஸ்டார்க் பந்தில் டெல்லி கேப்டன் அக்சர் படேலிடம் கேட்ச் தந்து ரன் எடுக்காமல் அவுட்டானார். அதனால், 25 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. அதைத் தொடர்ந்து, அனிகேத் வர்மா களமிறங்கினார். சிறிது நேரத்தில், 4 பவுண்டரி அடித்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் (22 ரன்), ஸ்டார்க் பந்தில், ராகுலிடம் கேட்ச் தந்து அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசன், அனிகேத்துடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றினார். குல்தீப் வீசிய 9வது ஓவரின் முதல் பந்தில் கிளாசன் சிக்சர் அடித்தபோது, அணியின் ஸ்கோர் 100ஐ கடந்தது.
மோகித் சர்மா வீசிய 11வது ஓவரில் கிளாசன் (32 ரன்) அடித்த பந்தை, விப்ராஜ் அற்புதமாக தாவிப்பிடித்து அவுட் செய்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு, 42 பந்துகளில் 77 ரன் குவித்திருந்தது. அதன் பின், அபினவ் மனோகர், அனிகேத்துடன் இணை சேர்ந்தார். குல்தீப் யாதவ் வீசிய 12வது ஓவரின் கடைசிப்பந்தை எதிர்கொண்ட அபினவ் (4 ரன்) ஃபாப் டூப்ளெஸிஸிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அதையடுத்து, கேப்டன் பேட் கம்மின்ஸ் உள் வந்தார். 14வது ஓவரில் தன் அரை சதத்தை நிறைவு செய்தார் அனிகேத். ஆனால், அடுத்த பந்திலேயே பேட் கம்மின்ஸ் (2 ரன்), குல்தீப் வீசிய பந்தில், ஃபிரேசர் மெக்குர்க்கிடம் கேட்ச் தந்து 7வது விக்கெட்டாக அவுட்டானார்.
பின், வியான் முல்டர், இம்பாக்ட் மாற்று வீரராக, டிராவிஸ் ஹெட்டிற்கு பதிலாக களமிறங்கினார். 15வது ஓவரில் அதிரடியாக ஆடிய அனிகேத், ஒரு பவுண்டரி, 2 சிக்சர் விளாசி, அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். இருப்பினும், குல்தீப் வீசிய16வது ஓவரின் 4வது பந்தில் சிக்சர் அடித்த அவர் அடுத்த பந்தில், ஃபிரேசரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அவர், 41 பந்துகளில், 6 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 74 ரன் குவித்தார். அதன் பின், ஹர்சல் படேல் உள் வந்தார். 19வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க், ஹர்சல் படேலை (5 ரன்) வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து கடைசி விக்கெட்டாக, முகம்மது ஷமி ஆட வந்தார். அந்த ஓவரின் 4வது பந்தில் முல்டர் (9 ரன்), டூபிளெஸிஸ்ஸிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 18.4 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன் எடுத்தது. டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க், 35 ரன் தந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தவிர, குல்தீப் யாதவ் 3, மோகித் சர்மா 1 விக்கெட் எடுத்தனர்.
அதையடுத்து, 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி துவக்க வீரர்கள், ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், ஃபாப் டூப்ளெசிஸ் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்திருந்த நிலையில், 10வது ஓவரில் ஜீசன் அன்சாரி பந்தில் டூப்ளெஸிஸ் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து, 38 ரன்னில் மெக்குர்க், அன்சாரி பந்தில் அவரிடமே கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். பின்னர், அபிஷேக் போரெல், கே.எல்.ராகுல் இணை சேர்ந்து ஆடினர். 5 பந்தில் 15 ரன் எடுத்திருந்தபோது ராகுல், அன்சாரி பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இருப்பினும், பின் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், போரெல் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
16 ஓவர் முடிவில் டெல்லி, 166 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபிஷேக் போரெல் 34, ஸ்டப்ஸ் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியின் ஜீசன் அன்சாரி 3 விக்கெட் வீழ்த்தினார்.
The post சன்ரைசர்சுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி appeared first on Dinakaran.