ரூ.41.32 கோடி மதிப்பீட்டில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் புதிய கட்டிடங்கள்: காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பூந்தமல்லி, மார்ச் 30: காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 41.32 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

இவ்வரசு பொறுப்பேற்ற மே 21 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் ரூ.491.43 கோடி செலவில் 2955 காவலர் குடியிருப்புகள், ரூ.58.01 கோடி செலவில் 49 காவல் நிலையக் கட்டடங்கள், ரூ.122.40 கோடி செலவில் 18 காவல்துறை இதரக் கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, காவல்துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காவலர் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, தீயிலிருந்து உயிர்களையும், உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச்சரிவுகள் போன்றவைகளிலிருந்தும் மக்களை காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கிய பணியாகும். இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் கட்டித் தருதல், பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தருதல், பல்வேறு நவீன கருவிகள் மற்றும் தீயணைப்பு ஊர்திகளை வழங்குதல் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் ரூ.35.64 கோடி செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 204 குடியிருப்புகள், ரூ.53.38 கோடி செலவில் 30 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள், ரூ.2.45 கோடி செலவில் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.91.47 கோடி செலவிலான கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குறிப்பாக அம்பத்தூரில் 6 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம், பூந்தமல்லியில் 1 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் 21 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். இறுதியாக, காவல்துறையின் பயன்பாட்டிற்காக 5 கோடி ரூபாய் செலவிலான 500 இருசக்கர வாகனங்களும், 27 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலான 300 நான்கு சக்கர வாகனங்களும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 45 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள் மற்றும் 50 இருசக்கர வாகனங்களும் என மொத்தம் 60 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான வாகனங்களின் சேவைகளை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.41.32 கோடி மதிப்பீட்டில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் புதிய கட்டிடங்கள்: காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: