பூந்தமல்லி, மார்ச் 30: செம்பரம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பு மத்தியில் மெட்ரோ ரயில் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகையுடன் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்றனர். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நடைபெற்று, முடியும் தருவாயில் உள்ளது. இதேபோல் பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மெட்ரோ ரயில் செல்லும் பாதைகளை அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைக்க அளவீடு நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சான்ட்ரோ சிட்டி பகுதியில் மெட்ரோ ரயில் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக மெட்ரோ ரயில் அதிகாரிகள் குடியிருப்புக்கு மத்தியில் ரயில் வழித்தடம் அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அதற்கான பணிகள் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சான்ட்ரோ சிட்டி மக்கள் நேற்று செம்பரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கிராம சபை கூட்டத்திற்கு பங்கேற்ற பெண்கள் உள்ளிட்டோர் கூட்டமாக கையில் பதாகையுடன் வந்து சிறப்பு அதிகாரியிடம் மனு அளித்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசித்து வரும் நிலையில், வீடுகளை அகற்றினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும் குடியிருப்பு அருகே காலி நிலங்கள் உள்ள நிலையில் அங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சான்ட்ரோ சிட்டி பகுதி வழியாக மெட்ரோ ரயில் சென்றால் 50க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழக அரசு தலையிட்டு குடியிருப்புகள் பாதிக்காத வகையில் மாற்று வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகளை தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செம்பரம்பாக்கம் ஊராட்சியில் குடியிருப்பில் மெட்ரோ ரயில் செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு: கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.