திருவள்ளூர், மார்ச் 30: திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு கிராமத்தில் சிவக்குமார் என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், ஓட்டல் தொழில் செய்வதற்காக அவருடைய அம்மா – அப்பா பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தினை திருவள்ளூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து, கடனாக பணம் பெறுவதற்காக முடிவு செய்துள்ளார். அதன்படி, கூட்டுறவு வீட்டுவசதி சங்க அலுவலகத்திற்கு, அவருடைய அப்பாவுடன் சென்று ஆவணங்களை கொடுத்து கடன் கேட்டுள்ளார். அதன்படி, கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு, கடந்த 27ம் தேதி சிவக்குமாரின் அப்பா பெயரில் ₹11.76 லட்சம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த, காசோலையை வழங்கும்போது கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரியும் ராமலிங்கம் என்பவர், கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுத்து காசோலை வழங்கியதற்காக லஞ்சமாக ₹17 ஆயிரம் கேட்டு, அதனை கணக்காளராக பணிபுரியும் ஏகாம்பரத்திடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.பின்னர் கணக்காளர் ஏகாம்பரத்தை பார்த்து, புகார்தாரர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை கூறியபோது, கணக்காளர் ஏகாம்பரம் ‘₹15 ஆயிரம் கொண்டு வா, நான் பார்த்துக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார். இது தொடர்பாக சிவகுமார் திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி கணேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், சிவக்குமார் ரசாயனம் தடவிய பணத்தை சிவக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க சங்கத்தின் செயலாளர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்பேரில் கணக்காளர் ஏகாம்பரத்திடம் ₹15 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கடன் வழங்க ₹15,000 லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வீட்டுவசதி சங்க செயலாளர், கணக்காளர் கைது: திருவள்ளூரில் பரபரப்பு appeared first on Dinakaran.