ஊத்துக்கோட்டை, மார்ச் 26: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதைச்சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஊத்துக்கோட்டைக்கு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்து செல்வார்கள். அவ்வாறு, வருபவர்கள் தலைக்கு தலைக்கவசம் அணியாமல் வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் வரும்போது, ஒரு சிலருக்கு விபத்து ஏற்பட்டு தலையில் படுகாயம் அடைகின்றனர். மேலும், தலைக்கவசம் அணியாமல் செல்வதால், ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர், பைக்கில் இருந்து விழுந்தோ அல்லது விபத்து ஏற்பட்டோ தலைக்கவசம் அணியாததால் உயிரிழக்கிறார்கள்.
இவ்வாறு, விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி தலைமையில், இன்ஸ்பெக்டர் தேவராஜ், எஸ்ஐக்கள் பிரசன்னவரதன், வேலு, போக்குவரத்து எஸ்ஐ திருக்குமரன் ஆகியோர் நேற்று பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம், டிஎஸ்பி சாந்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமரைப்பாக்கம் பகுதியில் 2 மாணவர்கள் பைக்கில் செல்லும்போது, சென்டர் மீடியனில் மோதி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில், அவர்கள் தலையில் காயமடைந்து இறந்தனர். அதுமட்டுமல்லாமல் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்து ஏற்பட்டு பலபேர் இறந்து போகிறார்கள். எனவே, நீங்களும் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் என அறிவுரை வழங்கினார். மேலும், ஹெல்மெட் அணியாமல் வந்த 50 பைக்குகளுக்கு, ₹1000 வீதம் ₹50,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
The post ஊத்துக்கோட்டையில் விபத்து தடுப்பது குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு appeared first on Dinakaran.