கட்சியில் இருக்க தகுதியே இல்லாதவர்; அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்சை சேர்ப்பதற்கு சாத்தியமே இல்லை: பிரிந்தது… பிரித்ததுதான்.. எடப்பாடி திட்டவட்டம்

தூத்துக்குடி: ‘ஓபிஎஸ்சும் நானும் பிரிந்தது, பிரிந்தது தான். இனி அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு சாத்தியமே கிடையாது’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். பாளையங்கோட்டை அருகே உள்ள திருத்து கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பல்வேறு திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசிற்கு வர வேண்டிய நிதி தாமதமாகி உள்ளது. அது தொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக இரு மொழிக் கொள்கையைதான் கடைப்பிடித்து வருகிறது. தற்போதும் தமிழகத்தில் இருமொழி கொள்கை தொடர வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு, அதனை வலியுறுத்தியும் உள்துறை அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம். ஓபிஎஸ்சும் நானும் பிரிந்தது, பிரிந்தது தான். இனி அதிமுகவில் அவரை சேர்ப்பதற்கு சாத்தியமே கிடையாது. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, அதிமுகவினரின் கோயிலான கட்சியின் தலைமை அலுவலகத்தை என்று அவர் உடைத்தாரோ, அப்போதே அவருக்கு கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை.

அதிமுகவை விட்டு சென்ற நிர்வாகிகள் மற்றும் பிற கட்சியினரும் அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். அண்ணாமலை டெல்லி சென்றிருப்பது குறித்து அவரிடம்தான் கேட்கவேண்டும். ஒத்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.  தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். அவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு.

இலங்கை அரசு திட்டமிட்டு தமிழக மீனவர்களை தாக்குவதும், வலைகள், படகுகளை பறிமுதல் செய்வதோடு, மீனவர்களின் உயிரான படகுகளையும் பறிமுதல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கண்டனத்திற்குரியது. இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க ஒன்றிய அரசிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் அவர்களுக்கு நிவாரணம் அளித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கட்சியில் இருக்க தகுதியே இல்லாதவர்; அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்சை சேர்ப்பதற்கு சாத்தியமே இல்லை: பிரிந்தது… பிரித்ததுதான்.. எடப்பாடி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: