ஐபிஎல் 7வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேட்டை தொடருமா? லக்னோவுடன் இன்று மோதல்

ஐதராபாத்: ஐபிஎல் போட்டியின் 7வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகள் இன்று மோதுகின்றன. ஐபிஎல் 18வது சீசனில் 7வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ், லக்னோ அணிகள் களமிறங்குகின்றன. கடந்த 23ம் தேதி இங்கு நடந்த முதல் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 44 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. நடப்புத் தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில், சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிராக குவித்த 286/6 ரன்னே அதிகபட்ச ஸ்கோர்.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவித்த 2வது அதிகபட்ச ரன் இது. அதுமட்டுமல்ல, கடந்த சீசனில், சன்ரைசர்ஸ் அணி, பெங்களூருக்கு எதிராக குவித்த 287/3 ரன் முதலிடத்திலும், மும்பைக்கு எதிராக சேர்த்த 277/3 ரன் 3ம் இடத்திலும் உள்ளன. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், தொடரின் முதல் சதம் விளாசிய இஷான் கிஷண், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாஸன், கேப்டன் பேட் கம்மின்ஸ் என கடைசி வரை பேட்டிங்கில் கலக்கும் அதிரடி வீரர்கள் சன்ரைசர்ஸ் அணியில் உள்ளனர். பந்து வீச்சிலும் முகமது ஷமி, சிம்ரஜித் சிங், ஆடம் ஜம்பா, ஹர்ஷல் படேல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள புதிய கேப்டன் ரிஷப் பண்ட் தலைமையில் லக்னோ அணி ஐதராபாத்துக்கு வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது லக்னோ.அதனால் வெற்றிக் கணக்கை தொடங்க அணியில் உள்ள அய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், டேவிட் மில்லர் ஆகியோர் அதிரடியை தொடர வேண்டும். முதல் ஆட்டத்தில் தலா 2விக்கெட் கைப்பற்றியதுடன், சிக்கனமாகவும் பந்து வீசிய தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் ரதி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இன்றும் சன்ரைசர்ஸ் அணிக்கு சவாலாக இருப்பர். சன்ரைசர்ஸ் அணியின் சொந்த களமான ஐதராபாத்தில் போட்டி நடப்பதால், போட்டியை காண ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

நேருக்கு நேர்
* இரு அணிகளும் இதுவரை வெறும் 4 போட்டிகளில் மட்டுமே மோதி உள்ளன.
* இந்த 2 அணிகள் மோதிய 4 போட்டிகளில் 3ல் லக்னோவும், ஒன்றில் சன்ரைசர்சும் வெற்றி பெற்றுள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக லக்னோ 185, சன்ரைசர்ஸ் 182 ரன்னும், குறைந்தபட்சமாக லக்னோ 165, சன்ரைசர்ஸ் 121 ரன்னும் சேர்த்துள்ளன.
* கடந்த 2024ல் இந்த 2 அணிகளும் மோதிய ஒரே ஒரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

ஐபிஎல் புள்ளிப் பட்டியல்
ரேங்க் அணி போட்டி வெற்றி தோல்வி ரன்ரேட் புள்ளி
1 சன்ரைசர்ஸ் 1 1 0 +2.200 2
2 பெங்களூரு 1 1 0 +2.137 2
3 பஞ்சாப் 1 1 0 +0.550 2
4 சென்னை 1 1 0 +0.493 2
5 டெல்லி 1 1 0 +0.371 2
6 லக்னோ 1 0 1 -0.371 0
7 மும்பை 1 0 1 -0.493 0
8 குஜராத் 1 0 1 -0.550 0
9 கொல்கத்தா 1 0 1 -2.137 0
10 ராஜஸ்தான் 1 0 1 -2.200 0
(கொல்கத்தா-ராஜஸ்தான் போட்டிக்கு முன்)

* பும்ராவை முந்திய ரஷித் கான்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் அணி பந்து வீச்சாளரான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான், துவக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யாவை வீழ்த்தினார். இதன் மூலம் 122 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக அவர் உருவெடுத்தார். இதனால், ஐபிஎல்லில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் லஸித் மலிங்கா 105, யஸ்வேந்திர சகல் 118 போட்டிகளில் 150 விக்கெட் வீழ்த்திய வீரர்களாக முதல் இரு இடங்களில் உள்ளனர். 124 போட்டிகளில் 150 விக்கெட் எடுத்துள்ள இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

* நூறை விட்டுத் தந்து பேரை வாங்கிய ஷ்ரேயாஸ்
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அற்புதமாக ஆடிய பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ரன் குவித்திருந்தபோது, ஆட்டத்தின் கடைசி ஓவர் வந்தது. எதிரில் சக வீரர் சஷாங்க் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். 100 ரன்களை எட்ட இன்னும் 3 ரன்களே தேவைப்பட்ட நிலையில், எதிரில் இருப்பவரை ஒரு ரன் எடுத்து விட்டு ஓடி வரச் சொல்லி சதத்தை பூர்த்தி செய்வதே கிரிக்கெட்டில் முன்னணி வீரர்களின் வழக்கமாக உள்ளது.
இதற்கு மாறாக, எதிரில் நின்ற சஷாங்க்கிடம், ‘நான் அடுத்த மேட்சில் 100 அடித்துக் கொள்கிறேன். நீ வெளுத்துக்கட்டு’ என ஷ்ரேயாஸ் உற்சாகப்படுத்தினார். அதன் விளைவாக, முகம்மது சிராஜ் வீசிய அந்த கடைசி ஓவரில் சஷாங்க் 5 பவுண்டரிகளை விளாசினார். அதனால், அணியின் ஸ்கோர் 243 ஆக உயர்ந்தது. கடைசியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. ஷ்ரேயாசின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

The post ஐபிஎல் 7வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் அணியின் ரன் வேட்டை தொடருமா? லக்னோவுடன் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: