திருப்பூர்: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவர்கள் அனைவரும் வங்கிகளில் தங்களது சேமிப்புக் கணக்குகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பல்வேறு உதவித்தொகைகளை மாணவர்கள் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கிலேயே பெற்றுக் கொள்ளும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் வங்கிகளில் தங்களது சேமிப்பு கணக்கு துவங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முக்கிய ஆவணமான ஆதார் கார்டுகளில் மாணவர்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண், புகைப்படம் உள்ளிட்டவை மாற்றம் செய்தும், கைரேகைகளை புதுப்பித்தும் வருகின்றனர். இதற்காக திருப்பூரில் உள்ள ஆதார் மையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
மாணவர்களின் வசதிக்காக பள்ளிகளில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால், தற்காலிக மையங்கள் செயல்படவில்லை. இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தபால் நிலையங்களில் செயல்படும் ஆதார் மையங்களில் மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்கின்றனர். மேலும் 3 வயது நிரம்பிய சிறுவர், சிறுமியர்கள் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் சேர்க்க வேண்டி இருப்பதால், புதிதாக ஆதார் கார்டு எடுக்க வருபவர்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது.
The post வங்கி கணக்கு தொடங்க ஆதார் மையங்களில் குவியும் பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.