தமிழ்நாட்டில் 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு, கலைஞரால் 72 ஆயிரம் வேளாண் பட்டதாரிகள்!: பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி : “2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அனுமதி அளித்து, இதில் 1.81 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.மீதம் உள்ளவர்களுக்கு சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, விரைவில் மின் இணைப்புகள் வழங்கப்படும்”

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் : தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் உள்ளதா? என உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர், “தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, இதுவரை 72,664 மாணவர்கள் பயின்று பட்டம் பெற்றுள்ளனர். இதன்வழி, ஆண்டுதோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மாணவர்கள், வேளாண்மை படிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.நாகை கீழ்வேளூர் வேளாண் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது.கல்லூரிக்கு கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது.”இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு : தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்கள். அதன்படி, தென் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நெல்லை புறவழிச்சாலை திட்டத்திற்கு முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட பணிக்காக நில எடுப்பு வேலைகளும் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் நடைபெறும்.

அமைச்சர் கே.என்.நேரு: நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு பகுதியில் அமைந்துள்ள ஏரியை சுத்தம் செய்ய, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் திருச்செங்கோடு ஏரி சுத்தம் செய்யப்படும்.

அமைச்சர் மூர்த்தி : “தமிழ்நாட்டில், 2018 முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுயமரியாதை திருமணம் குறித்து அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை பயிற்சி நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது!”

The post தமிழ்நாட்டில் 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு, கலைஞரால் 72 ஆயிரம் வேளாண் பட்டதாரிகள்!: பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: