வரும் மே 1ம் தேதி முதல் அமல்; ‘ஏடிஎம்’ இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு: வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

புதுடெல்லி: வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது, ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். இயந்திரத்தை ஒரு மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் ஏ.டி.எம்-ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும். அதன்படி இதுவரை இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்த பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.21-ஐ கட்டணமாக வங்கிகள் வசூலித்து வந்தன.

தற்போது இந்த கட்டணம் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மே மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, வரும் மே 1ம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பதற்கான கட்டணமாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 வசூலிக்கப்படும். வங்கி வாடிக்கையாளர்கள் தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ஐந்து முறை இலவசமாக ஏடிஎம்-யில் பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் தாங்கள் கணக்கு வைக்காத பிற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் 5 முறையும் கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

இதன் பிறகு ஏடிஎம்மை பயன்படுத்தினால் மே 1ம் தேதி முதல் ஒருமுறைக்கு ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும். இதுகுறித்து பிஎல்எஸ் இ-சர்வீசஸின் தலைவர் ஷிகர் அகர்வால் கூறுகையில், ‘ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்கள் உயர்த்தியதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் அதிகரித்து வரும் பணப் பரிவர்த்தனை தான். புதிய கட்டண வசூல் அடிக்கடி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சுமையாக இருக்கும். அதே கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் செயல்படும் மைக்ரோ ஏடிஎம்கள் மற்றும் பிசி நெட்வொர்க்குகளில் கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்’ என்றார்.

The post வரும் மே 1ம் தேதி முதல் அமல்; ‘ஏடிஎம்’ இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்வு: வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: