பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அதிமுகவுடன் உரிய நேரத்தில் உடன்பாடு: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் பாஜ உடனான கூட்டணிக்காக அல்ல என அதிமுக தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், ‘அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. இதில் உரிய நேரத்தில் உடன்பாடு எட்டப்படும்’ என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, கூட்டணி குறித்த ஆரம்ப கட்ட பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அனைத்து கூட்டணி கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றுபட்டுள்ளன. எதிர்க்கட்சிகளைப் பொறுத்த வரையில் சிதறிக் கிடக்கின்றன. கூட்டணி விஷயத்தில் அதிமுகவும் முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதே சமயம், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ வழக்கம் போல் முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை கிளறி மிரட்டி வருகிறது. இந்த மிரட்டல்கள் காரணமாக, ‘பாஜவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணியே கிடையாது’ என கூறி வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என அவர் கூறியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார். எனவே, மீண்டும் அதிமுக-பாஜ கூட்டணி சேரும் என கூறப்படும் நிலையில் இதுபற்றி அதிமுக தலைவர்கள் வாய் திறக்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில், ஆங்கில டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பதிலளித்துள்ளார்.

அதில் அமித்ஷா கூறியதாவது: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகிறார். பட்ஜெட் விவாதத்தில் 42 சதவீதம் பேசியது அவர்தான். நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் வியட்நாம் சென்றுவிட்ட அவர் அங்கிருந்து திரும்பிய பிறகு அவையில் பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார். நாடாளுமன்றம் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சி போல இப்போது கிடையாது. நீங்கள் நினைக்கும் போதெல்லாம் இங்கு பேச முடியாது. ராகுல் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர் வியட்நாமில் இருந்து விட்டு இப்போது குற்றம்சாட்டுகிறார்.

அதே போல நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக காங்கிரஸ் கூறுகிறது. அவர்கள் கூறுவது போல் எமர்ஜென்சி இருந்திருந்தால், காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் அல்லவா இருந்திருப்பார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பொதுப்பணி ஒப்பந்தங்களில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியிருப்பது முஸ்லிம்களுக்கு தந்திருக்கும் லாலிபாப். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பை மீறும் செயல். இதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். நீதிமன்றம் மூலம் இந்த அரசியலமைப்பு விதிமீறல் தடுக்கப்படக் கூடியது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரும் காங்கிரஸ் அவர்கள் ஆட்சியில் அதை எதிர்த்தது. 2011ல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய அவர்கள் அதன் முடிவை வெளியிடவில்லை. எனவே எந்த அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது என ஆய்வு செய்து நாங்கள் முடிவெடுப்போம். பாஜ தேசிய தலைவராக நான் இருந்த போது அடுத்த 30 ஆண்டுகள் ஒன்றியத்தில் பாஜ தான் ஆட்சி செய்யும் என கூறியிருந்தேன். இப்போது அதில் 10 ஆண்டு மட்டுமே முடிந்துள்ளது. எங்கள் அரசின் செயல்பாட்டில் மக்களின் அமோக ஆதரவு எங்களுக்கு உள்ளது.

பாஜ ஆளும் அனைத்து மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் படிப்படியாக கொண்டு வரப்படும். மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த சரியான நேரத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். அங்கு இரு சமூக மக்கள் ஒப்புதலைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது அங்கு அமைதியான சூழல் திரும்பிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உரிய நேரத்தில் உடன்பாடு எட்டப்படும். சரியான நேரத்தில் முடிவை நாங்கள் அறிவிப்போம். இவ்வாறு அமித்ஷா கூறினார். இதன் மூலம், அதிமுக-பாஜ கூட்டணி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

* தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கப்படாது
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகள் குறையக் கூடும், இதன் மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைவதோடு வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து நமது உரிமைகள் பறிக்கப்படும் என திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டை தொடர்ந்து தெலங்கானா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்த்து தெரிவித்துள்ளன. இது குறித்து, அமித்ஷா கூறுகையில், ‘‘மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் தமிழ்நாடு உட்பட எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படாது என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். இதில் .001 சதவீதம் கூட யாருக்கும் பாதிப்பு ஏற்படாது’’ என்றார்.

The post பேச்சுவார்த்தை நடந்து வருகிறது அதிமுகவுடன் உரிய நேரத்தில் உடன்பாடு: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: