திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு கோயில்களுக்கு 84 திருமண மண்டபங்களை கட்டிக்கொண்டிருக்கிறோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் (திமுக) பேசுகையில், “வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வந்தவாசி நகரத்தின் அருகில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் தவனகிரிநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில். அந்த கோயிலுக்கு ஒவ்வொரு கார்த்திகை தீபத்துக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 4.50 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அந்த இடத்தில் கோயிலுக்கென கல்யாண மண்டபம், ஒரு வணிக வளாகம் அமைக்க அமைச்சர் முன்வருவாரா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,‘‘அம்பேத்குமார் பலமுறை இது தொடர்பாக நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரிடம் அழுத்தம் கொடுத்து கேட்டிருக்கின்றார். திருமண மண்டபங்களை பொறுத்தளவில் தொடர் செலவு, தொடரா செலவு என்று இரு கூறுகளை ஆராய வேண்டி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 84 திருமண மண்டபங்களை புதிதாக கட்டி கொண்டிருக்கின்றோம். அதில் 37 முடிவுற்று இருக்கின்றது. உறுப்பினரின் கோரிக்கையை ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருப்பின் பரிசீலிக்கப்படும். வழியிருக்கும் என்றால் மனமிருக்கும். ஆகவே அவர் கூறிய அந்த திருமணம் மண்டபத்தை கட்டுவதற்குண்டான ஆய்வை மீண்டும் அவரை அழைத்துச் சென்று மேற்கொள்வோம்” என்றார்.

* அமெரிக்காவில் கூட ஆவின் நெய்யை விரும்பி சாப்பிடுகிறார்கள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கன்னியாகுமரி தளவாய் சுந்தரம் (அதிமுக) பேசுகையில், “ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் ”, தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு விற்பனை நிலையம் உள்ளது. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது. தமிழகத்தில் உற்பத்தியாகும் நெய்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகின்றன. உலக சந்தையில் 50 ரூபாய் நம்முடைய நெய் கூடுதலாக இருந்தாலும், நம்முடைய ஆவின் நெய்யைத்தான் அமெரிக்காவில் விரும்பி வாங்குகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து, கந்தர்வக்கோட்டை சின்னதுரை (மார்க்சிஸ்ட்) பேசுகையில் “ கறம்பக்குடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி கொடுத்தால் கட்டித் தர முடியும். பைசாதான் இப்போ பிரச்னையா இருக்கு, பணம் கொடுத்தா உடனே கட்டித் தருகிறோம்’’ என்றார்.

* கோடை வெப்ப நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவமும் பயன்படுத்தப்படும்: காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கைக்கு அமைச்சர் பதில்
சட்டப்பேரவையில் நேற்று குளச்சல் ஜே.ஜே.பிரின்ஸ் (காங்கிரஸ்), கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது, “பொதுவாக ஜனவரி முதல் ஜூன் மாதங்களில் வெப்பக் காலம். இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விதவிதமான நோய்கள் வருகிறது. கொரோனா காலத்தில் நம்மிடத்தில் நவீன மருத்துவம் இருந்தாலும்கூட, ஆயுர்வேதம், சித்த மருத்துவமான கபசுரம், நில வேம்பு கஷாயம் போன்ற மருந்துகள் நமக்கு வழங்கப்பட்டன. அதேபோல் அரசு பொது மருத்துவமனைகளில் கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்காக சித்த மருந்துப் பொருட்களையும் இருப்பு வைக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கோடை காலங்களில் ஏற்படும் நீரிழப்பு, வெப்பம் சார்ந்த நோய்கள், வெப்ப வாதம், தோல் நோய்கள், கண் அழற்சி, வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய், நீரினால் பரவக்கூடிய டெங்கு, சிக்கன்குனியா போன்ற நோய்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும், உரிய சிகிச்சை அளித்திடும் வகையிலும், திறம்பட செயல்பட்டு வருகின்றது. இதற்காக போதுமான அளவு உப்பு, சர்க்கரை கரைசல் பொட்டலங்கள், அத்தியாவசிய மருந்துகள், நீர்ச்சத்து குறைவை நிர்வகிப்பதற்கான உபகரணங்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 2 முதல் 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு வெப்பத்தாக்கம் மற்றும் வெப்பவாத நோய்க்கான சிகிச்சை அளிக்க சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தையும் இதில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவருடைய ஆலோசனையையும் ஏற்று, கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காப்பதற்கு சித்த மருத்துவமும் பயன்படுத்தப்படும்.

* தாலுகாக்கள் பிரிப்பது குறித்த எம்எல்ஏக்கள் கோரிக்கை அனைத்தும் பரிசீலனை: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தகவல்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கடத்தூரை தலைமையிடமாக கொண்டு வட்டாச்சியர் அலுவலகம் கொண்டு வரப்படுமா என்று பாப்பிரெட்டி பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “வட்டங்கள் (தாலுகாக்கள்) பிரிப்பது குறித்த உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளது. தகுதியான வட்டங்கள் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

* பேரவையில் இன்று…
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்து பேசுவார். இதையடுத்து வாக்கெடுப்பு மூலம் மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, இந்த நிதி ஆண்டுக்கான நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்படும்.

The post திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு கோயில்களுக்கு 84 திருமண மண்டபங்களை கட்டிக்கொண்டிருக்கிறோம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: