ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது; திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை: விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர்

திருப்புவனம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருப்புவனத்தில் இன்று நடந்த வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் ரூ.2 கோடிக்கு விற்பனையாகின. இதையொட்டி ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் குவிந்ததால் சந்தை களைகட்டியது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களிருந்தும் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வர். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விசேஷ காலங்களில் நடைபெறும் ஆட்டுச்சந்தை களைகட்டும்.

வரும் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் இன்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சந்தை கூடியதும் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை வாங்கினர். இதில் ஆந்திரா வகை ஆடுகள் வியாபாரிகளை வெகுவாக கவர்ந்தது. ஆடுகள் வரத்து அதிகமாக இருந்த போதும் விலையும் அதிகமாக இருந்தது. கடந்த சந்தைகளில் ரூ.6500 வரை விற்பனையான 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரம் வரை விற்பனையானது. இதுபோன்று நாட்டுக்கோழி, சேவல் ரூ.1000 முதல் ரூ.1500 வரையும், 5 கிலோ எடை கொண்ட வான்கோழி ரூ.7500 வரையும் விற்பனையானது. ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் குவிந்ததால் சந்தை திக்குமுக்காடியது.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ‘வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதில் சிக்கல் உள்ளது. ஆகையால் எனது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தேன்’ என்றார். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி செம்மறி, வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிக விலையையும் பொருட்படுத்தாமல் போட்டி போட்டு வாங்கினர். 4 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்தன. ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையாகின’ என்றனர். சந்தைக்கு கொண்டு வரப்படும் ஒரு ஆட்டுக்கு திருப்புவனம் பேரூராட்சி சார்பில் ரூ.27 கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.

The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது; திருப்புவனம் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை: விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: