கன்னியாகுமரி – காரோடு நான்கு வழி சாலைக்கு தோட்டிக்கோட்டில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி – காரோடு நான்கு வழிச்சாலையில், தோட்டிகோட்டில் பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜூன் மாதத்துக்குள் கான்கிரீட் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. முடங்கி கிடந்த இந்த பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. நாகர்கோவில் – பெருங்குடி (காவல்கிணறு) நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து, தற்போது வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. காரோடு – வில்லுக்குறி, வில்லுக்குறி – நாகர்கோவில், நாகர்கோவில் – கன்னியாகுமரி இடையிலான பணிகள் இன்னும் முடிவடையாமல் நடந்து வருகின்றன. கிடப்பில் உள்ள நான்கு வழிச்சாலையில் 28 பெரிய பாலங்கள், 33 சிறிய பாலங்கள் உள்பட சுமார் 60 பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகளை எடுத்துள்ள நிறுவனம் சார்பில் ஒடிசா, பீகார், உ.பி. உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. இதில் கன்னியாகுமரி – காரோடு வரையிலான நான்கு வழிச்சாலையில், புத்தேரி பெரிய குளத்தின மேல் அமைய உள்ள பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த பால பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இதற்காக குளத்தில் மண் நிரப்பி பைலிங் பணிகள் நடந்தன. ராட்சத கிரேன்கள் மூலம் பாலம் அமைப்பதற்காக கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு பாலத்துக்கான ரேம்ப் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் மணல் மூட்டைகள் அடுக்கி பைல் லோடு டெஸ்ட் சோதனை நடந்தது. ஏற்கனவே ஐஐடி உள்ளிட்ட தொழில் நுட்ப வல்லுனர் குழு வகுத்துள்ள விதிமுறைகள் படி பைலிங் அமைக்கும் பணி தரமானதாக உள்ளதா? என்பதை கண்டறிய இந்த பைல் சோதனை நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக பாலம் அமைப்பதற்கான பணிகள் புத்தேரியில் வேகமாக நடந்து வருகின்றன.

இதேபோல் தோட்டிகோடு சந்திப்பிலும் நான்கு வழிச்சாலைக்கான பாலம் அமைக்கப்படுகிறது. 3 பிரிவுகளாக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்துக்கான கான்கிரீட் கூடுவைகள் (பாக்ஸ் வடிவமைப்பு கொண்டது) நேற்று வந்திறங்கின. ஜூன் மாதத்துக்கு பின் மழை தொடங்கி விடும் என்பதால், ஏப்ரல், மே மாதங்களுக்குள் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

The post கன்னியாகுமரி – காரோடு நான்கு வழி சாலைக்கு தோட்டிக்கோட்டில் பாலம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: