ராணிப்பேட்டை : ஓச்சேரி கிராமம் ஈஸ்வரன் கோயில் பகுதியில் வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். மேலும் டிஆர்ஓ சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, நேர்முக உதவியாளர் விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் ஆகியோரும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில் கலவை தாலுகா கனியனுர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் கனியனூர் கிராமத்திற்கு உட்பட்ட அரசு இலவச வீட்டுமனை வழங்கியதில், வீடு கட்டி குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு குடிதண்ணீர் வசதி இல்லாமல் சுமார் 1 கி.மீ. தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு நிரந்தரமாக தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். மேலும் மின்சார வசதியும், பட்டா வழங்கவும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
வன்னிவேடு கிராமம் பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை கோரி மனு அளித்தார்.நெமிலி வட்டம் ஓச்சேரி கிராமம் ஈஸ்வரன் கோயில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் மேற்கண்ட முகவரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். மேலும் நில வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் அனைத்தையும் செலுத்தி வருகின்றோம்.
எங்கள் பகுதியில் உள்ள சிவன் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நாங்கள் வசித்து வரும் பகுதியில் உள்ள சில வீடுகளை கோயில் இடம் என்று சொல்லி வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். நாங்கள் தினசரி அன்றாட கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றோம்.
எனவே இப்பகுதியில் உள்ள வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை இனி அதிகாரிகள் கைவிட வேண்டும். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கை, கால்கள், ரூ.4ஆயிரம் மதிப்பிலான காதொலிக் கருவியும், மாவட்ட கலெக்டரின் தன் விருப்பக் கொடை நிதியிலிருந்து இரண்டு பயனாளிகளுக்கு தலா ரூ.6,500 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை கலெக்டர் சந்திரகலா வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
473 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து மொத்தம் 473 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் சந்திரகலா, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மனு நிராகரிக்கப்பட்டால், உரிய காரணங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
The post ஓச்சேரி கிராமம் ஈஸ்வரன் கோயில் பகுதியில் வீடுகளை அப்புறப்படுத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும் appeared first on Dinakaran.