100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தம் குறித்து திமுக நோட்டீஸ் : நீதிபதி வீட்டில் பணக்குவியல் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தல்!!

சென்னை : 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மக்களவையில் நாடாளுமன்ற திமுகக்குழு தலைவர் கனிமொழி அளித்துள்ள நோட்டீஸில், கடந்த 4 மாதங்களாக தமிழ்நாட்டிற்கு கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், எந்த நிதியையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தி உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத் திமுக குழு தலைவர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

அதே போல், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணக்குவியல் சிக்கிய விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. நீதிபதி வீட்டில் பணக்குவியல் சிக்கியது குறித்து ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் நோட்டீஸில் தெரிவித்துள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணக்குவியல் விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முழுவதுமாக முடங்கியது. நீதிபதி வர்மா வழங்கிய தீர்ப்புகளை மறுஆய்வு செய்யவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. மேலும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் வழக்கறிஞர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தம் குறித்து திமுக நோட்டீஸ் : நீதிபதி வீட்டில் பணக்குவியல் குறித்தும் விவாதிக்க வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: