காசநோய் கண்டறிவதில் முதலிடத்தில் தமிழ்நாடு, திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி: “பூந்தமல்லி தொகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இரு மருத்துவர்களே உள்ளனர். செவிலியர்கள் இல்லை. புதிய கட்டடம் வேண்டும். மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்”

அமைச்சர் சுப்பிரமணியன்:“தமிழ்நாட்டில் காசநோய் தொடர்பாக 7,55,660 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு 21,768 பேர் புதிய காச நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே காசநோய் கண்டறிவதில் முதலிடத்தில் தமிழ்நாடு இருப்பதால் ஒன்றிய அரசிடம் கடந்த வாரம் விருது பெற்றது”

சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் : கிருஷ்ணகிரி தொகுதியில் புதிதாக பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் கே.என்.நேரு : புதிய பூங்கா அமைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. புதிய பூங்காக்களை அமைக்கத் தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே இடம் இருந்தால் புதிய பூங்கா அமைக்க இந்த ஆண்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார்: திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி எந்த நிலையில் உள்ளது?

அமைச்சர் சாமிநாதன்: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிலத்தில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது.

மேலும் சில அமைச்சர்கள் கூறிய தகவல்கள்!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் : லால்குடி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் அக்கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி : சென்னையில் மின்சாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் பணியில், விரைவில் குறித்த காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் பணிகள் முடிக்கப்படும்.

அமைச்சர் கே.என்.நேரு : கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் -கூடுவாஞ்சேரி தொகுதியில் அமைந்துள்ள கண்டிகை தாங்கல் குளத்தை சுற்றி பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

அமைச்சர் எ.வ.வேலு : கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை முதல் கருங்கல் வரையுள்ள சாலையை 5.5 கி.மீட்டர் இருவழிச் சாலையாக இந்த நிதியாண்டிலேயே விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

The post காசநோய் கண்டறிவதில் முதலிடத்தில் தமிழ்நாடு, திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் : சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: