திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் ரூ.186.58 கோடி செலவில் 95 இராஜகோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மேட்டூர் எஸ்.சதாசிவம்(பாமக) பேசுகையில்” மேட்டூரில் பழுதடைந்துள்ள முருகன் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய அரசு ஆவனசெய்யுமா? என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “30 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற மேட்டூர், அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தற்போது ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் திருப்பணி செய்திட ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்கும் குழு நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளது. வருகின்ற 7.04.2025 அன்று அத்திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

எஸ்.சதாசிவம்: மேட்டூர் நகராட்சியில் எனது கோரிக்கையை ஏற்று 2 கோடி 50 லட்சத்திற்கு ஞான தண்டாயுதபாணி கோயில் திருப்பணி செய்வதற்கு முன்வந்த அரசுக்கும், அறநிலைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மேட்டூர் நகர மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 7.04.2025 அன்று திருப்பணி தொடங்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரில் இராஜகோபுரம் கேட்டிருந்தோம். இராஜகோபுரம் அமைக்க மண் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது அமைச்சர் சொல்லி இருக்கிறார். அந்த இராஜகோபுரம் எப்போது அமைப்பீர்கள்? எப்போது திட்ட மதிப்பீடு செய்வீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். இரண்டாவதாக திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்தும்போது அன்னதானத்தை அந்த கோயிலுக்கு சேர்ப்பீர்களா என்று கேட்கின்றேன். கொளத்தூர் ஒன்றியம், பாலம் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்து 15 ஆண்டுகள் ஆயிற்று. அந்த கோயிலுக்கு மீண்டும் குடமுழுக்கு செய்வீர்களா?

அமைச்சர் பி.கே.சேகர்பாபு: உறுப்பினர் கோரிய அருள்மிகு ஞானதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் இராஜகோபுரத்திற்கு மண் பரிசோதனை, வரைபடம் ஒப்புதல் போன்ற முதற்கட்ட பணிகள் அனைத்தையும் நிறைவுற்று, ரூ.1.20 கோடி செலவில் மூன்று நிலை இராஜகோபுரம் அமைப்பதற்குண்டான அனைத்து நிலையிலும் அனுமதிகள் பெறப்பட்டிருக்கின்றன. உபயதாரர் நிதியை எதிர்பார்த்து இருந்தோம். இராஜகோபுரங்களை மாத்திரம் புதிதாக கட்டுவதற்கு ஆணையருடைய பொதுநல நிதி பயன்படுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் வேறு அதிக வருவாய் உள்ள திருக்கோயில்களில் கடனாக பெற்று அந்த இராஜகோபரப்பணி வெகு விரைவில் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் ரூ.186.58 கோடி செலவில் 95 இராஜகோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் ரூ.93.84 கோடி செலவில் 351 இராஜகோபுரங்களில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

எஸ்.சதாசிவம்: மேச்சேரி பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோயிலில் திருமண மண்டபம் இல்லாத நிலையில் இருக்கிறது. திருமண மண்டபம் அமைத்துக் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். மேச்சேரி ஒன்றியத்தில் புக்கம்பட்டி ஊராட்சியில் சென்றாய பெருமாள் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது. அந்த கோயிலுக்கு திருப்பணி அனுமதி பெற்று இருக்கின்றது. ஆனால் நிர்வாகம் கோயில் கட்டவும் அனுமதி இல்லை என்கிறது. அந்த கோயிலினுள் உள்ளே நுழைய முடியாத நிலையில் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து ரூ.50 லட்சம் திட்டத்தில் திருப்பணி நடைபெற்றிருக்கின்றது. அதுக்கு அனுமதி வழங்குவார்களா?

மேச்சேரியில் அமைந்துள்ள பசுபதிஸ்வரர் கோயிலுக்கு எப்போது திருப்பணி நடைபெறும் என்பதனையும், மேச்சேரிகாமாட்சி அம்மன் கோயில் திருப்பணி அறிவித்த நிலையிலே இருக்கிறது. இன்னும் தொடங்கவில்லை. மேச்சேரியில் முடி திருத்தும் மண்டபம், உணவு மண்டபம் 6 கோடியில் அமைத்து இருக்கீறீர்கள், என்னுடைய கோரிக்கையை ஏற்று பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கோரிக்கை வைத்த அடுத்த மாதமே ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தந்துள்ளார்கள். அதற்கு எனது தொகுதி மக்கள் சார்பில் முதலமைச்சருக்கும் துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். புக்கம்பட்டி சென்றாயப் பெருமாள் திருக்கோயிலுக்கு அனுமதி வழங்கி தர வேண்டும்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: உறுப்பினர் மானியக் கோரிக்கை அளவிற்கு திருப்பணிகளை கேட்டிருக்கின்றார். இருந்தாலும் பதில் சொல்ல வேண்டிய கடமையில் இருக்கின்றோம். மேச்சேரி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலுக்கு ரூ.4 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகள் 90 சதவீத பணிகள் நிறைவுற்று ஜூலை மாதம் குடமுழுக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலுக்கு உபயதாரர் நிதியில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அவர்கள் ஏற்கனவே இருக்கின்ற திருக்கோயில் இடத்தை விட்டுவிட்டு புதிதாக ஒரு இடத்தில் கோயிலை கட்ட ஆரம்பித்தார்கள். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இருக்கின்ற திருக்கோயிலை பழுது பார்த்து மீண்டும் புதுப்பித்து தருவதற்கு ரூ.42 லட்சம் செலவில் திருக்கோயிலின் நிதியை பயன்படுத்தி, வரும் ஜூலை மாதத்திற்குள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். அவர் கோரிய காமாட்சி அம்மன் கோயில் என்றாலும் சரி, அடுத்து விருந்து மண்டபம், பரிகார மண்டபம் போன்ற மண்டபங்களை கேட்டிருந்தார். அந்த பணிகளும் வேகமாக முடிவுற்று ஜூலை மாதத்தில் பக்தர்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதே நேரத்தில் நம்முடைய உறுப்பினர் பெயரை பார்த்தால் சதாசிவம் என்று வைத்திருக்கிறார்கள். சதா சிவனைப் பற்றிய எண்ணம் உள்ள அவரது தொகுதிக்கு மாத்திரம் 24 திருக்கோயில்களுக்கு சுமார் ரூ.20 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 17 திருக்கோயில்கள் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

The post திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் ரூ.186.58 கோடி செலவில் 95 இராஜகோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன: சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: