தோழியை நம்பி ஐதராபாத் வந்தபோது பரிதாபம்; விபசார கும்பலிடம் இருந்து தப்பிய மும்பை டிவி நடிகை: அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்ட போலீஸ்

ஐதராபாத்: தோழியை நம்பி ஐதராபாத்வந்த போது டிவி நடிகையை விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சி நடந்த நிலையில், அவரை அடுக்குமாடி குடியிருப்பில் தெலங்கானா போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க டிவி நடிகைக்கு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தோழி உள்ளார். இந்நிலையில் மசாப்டாங்கில் செயல்படும் பிரபல கடையின் திறப்பு விழாவிற்கு அந்த டிவி நடிகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகளை ஐதராபாத் தோழி செய்திருந்தார். திட்டமிட்டபடி கடந்த சில நாட்களுக்கு முன் டிவி நடிகையை, ஐதராபாத் வருமாறு அவரது தோழி அழைத்தார். மும்பையில் இருந்து ஐதராபாத் சென்று வருவதற்கான விமான கட்டணத்துடன் போதுமான சம்பளத்தையும் வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி நடிகையும் விமானத்தில் ஐதராபாத் வந்து சேர்ந்தார்.

மசாப்டாங்கிற்கு அருகிலுள்ள ஷ்யாம்நகர் காலனியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தங்க வைக்கப்பட்டார். அவருக்கு தேவையான பணிகளைச் செய்ய, வயதான பெண் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதுவரை எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், கடந்த 21ம் தேதி இரவு 9 மணியளவில் நடிகை தங்கியிருந்த குடியிருப்புக்குள் சென்ற இரண்டு பெண்கள், அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். தங்களுக்கு இரண்டு ஆண் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் பாலியல் உறவு மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினர். அதற்கு நடிகை மறுப்பு தெரிவித்தார். சிறிது நேரத்தில் மூன்று ஆண்கள் அங்கு வந்தனர். அவர்கள் நடிகையுடன் பாலியல் உறவு மேற்கொள்ள கட்டாயப்படுத்தினர். அதற்காக நடிகையை மிரட்டினர்.

ஒருகட்டத்தில் நடிகை கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதற்கிடையில், அந்த வயதான பெண்ணும், இரண்டு பெண்களும் நடிகையின் அறைக்குள் நுழைந்தனர். அவரைக் கட்டிப்போட்டு, அவர் வைத்திருந்த ரூ.50,000 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக தனது தோழிக்கு போன் செய்தார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அதிர்ச்சியடைந்த நடிகை, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நடிகையை மீட்டனர். நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் மசாப்டாங்க் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தோழியை நம்பி ஐதராபாத் வந்தபோது பரிதாபம்; விபசார கும்பலிடம் இருந்து தப்பிய மும்பை டிவி நடிகை: அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்ட போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: