இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவின் பேரில் 3 நீதிபதிகள் அடங்கிய உள்விசாரணை நடந்து வருகிறது. நீதிபதி என்பது அரசியலமைப்பு பதவி என்பதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை அமைப்புகள் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமல் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது எந்த குற்றவியல் நடவடிக்கையும் தொடங்க முடியாது என 1991ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், 1991ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாரா மற்றும் 3 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று ஆஜரான வழக்கறிஞர் நெடும்பாரா மற்றும் பிற மனுதாரர்கள், தங்களின் வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
அவர்கள், ‘‘இது பொதுநலன் சார்ந்த விவகாரம் என்பதால் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை என்றாலும், எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டியதும் அவசியம். இதுவே ஒரு சாமானியனுக்கு எதிராக இருந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை என பல விசாரணை அமைப்புகள் அந்த நபரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கும்’’ என்றனர்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘பொது வெளியில் கருத்துக்களை வெளியிட வேண்டாம். இதுவே போதுமானது. இந்த மனு வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு வரும்’’ என, அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார்.
* நீதித்துறையுடன் போட்டி போடவில்லை: தன்கர்
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான ஜெகதீப் தன்கர், பல்வேறு கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் நேற்று கூறுகையில், ‘‘பிரச்னைக்குள் செல்லாமல் விவாதங்கள் ஒருமித்த கருத்துடன், அக்கறையுடன், ஒற்றுமையாக நடத்தப்பட்டன. அரசு நிர்வாகமும், நாடாளுமன்றமும், நீதித்துறையும் ஒன்றுக்கொன்று எதிராக இல்லை. அனைத்து அரசு அமைப்புகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.
* அலகாபாத் நீதிபதியாக 2 வக்கீல்கள் நியமனம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம், வழக்கறிஞர்கள் அமிதாப் குமார் ராய் மற்றும் ராஜிவ் லோசன் சுக்லா ஆகிய இருவரையும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
* டெல்லி போலீஸ் திடீர் சோதனை
இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிற்கு நேற்று பிற்பகல் 1.50 மணி அளவில் போலீஸ் துணை கமிஷனர் தலையிலான குழு சென்றது. அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், நீதிபதி வீட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் போலீசார் சோதனை நடத்திய பின் வெளியேறினர்.
The post வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.