ஆதாரமற்ற கருத்தை கூறுகிறார் சபாநாயகர் ஜனநாயக முறையில் மக்களவை நடக்கவில்லை: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களைவை நேற்று ஒத்திவைக்கப்பட்ட போது சபாநாயகர் ஓம்பிர்லா, ’’இந்த அவையில் தந்தை-மகள், தாய்-மகள், கணவன்-மனைவி என உறுப்பினர்கள் இருந்துள்ளனர். இந்தச் சூழலில் எதிர்க்கட்சி தலைவர் சபையில் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய விதி எண் 349ன்படி நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன். அவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த, உறுப்பினர்கள் நடைமுறை விதிகளை பின்பற்ற வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார். எதற்காக சபாநாயகர் இக்கருத்தை தெரிவித்தார் என்பது உடனடியாக தெரியவில்லை. இதைத் தொடர்ந்து, மக்களவை துணைத்தலைவர் கவுரவ் கோகாய், பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சிக் கொறடா மாணிக்கம் தாகூர் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் 70 பேர் சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து, ராகுல் காந்தியை பேச வாய்ப்பு மறுக்கப்படுவதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: சபாநாயகர் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் கூறிய அனைத்தும் ஆதாரமற்றவை. ‘நீங்கள் என்னைப் பற்றி பேசியது போல் என்னையும் பேச விடுங்கள்’ என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்று விட்டார். தேவையே இல்லாமல் அவையை ஒத்திவைத்தார்.
அவையில், எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்க வேண்டுமென்பது மரபு. ஆனால் நான் பேச எழுந்திருக்கும் போதெல்லாம் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த 7-8 நாட்களாக நான் பேச அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயகத்தில் அரசுக்கு என்றும் எதிர்க்கட்சிக்கு என்றும் ஒரு இடம் உள்ளது. ஆனால் இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிக்கான இடமே இல்லை. பிரதமர் மோடி கடந்த வாரம் மகா கும்பமேளா பற்றி அவையில் பேசினார். அப்போதும் எனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. சபாநாயகர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. மொத்தத்தில், மக்களவை ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

The post ஆதாரமற்ற கருத்தை கூறுகிறார் சபாநாயகர் ஜனநாயக முறையில் மக்களவை நடக்கவில்லை: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: