சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழுத் தலைவர் க.தனசேகரன் பேசியதாவது: சென்னை மாநகராட்சியின் 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மிக சிறப்பாகத் தாக்கல் செய்யப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான வழிகாட்டுதலிலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சென்னை நகர மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், சென்னை மாநகராட்சி வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது. நமது நடப்பு நிதிநிலை அறிக்கையில், மொத்த வரவு ரூ.8,267.17 கோடி, செலவு ரூ.8,404.70 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது வருவாய் குறைபாடு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. இதில் சிறப்பு என்னவெனில், சென்னை மாநகராட்சியின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து ரூ.3,186 கோடியை எட்டியுள்ளது.
குறிப்பாக, சொத்துவரி மூலம் ரூ.2020 கோடி, தொழில்வரி மூலம் ரூ.600 கோடி, மாநில நிதிக்குழு மானியமாக ரூ.1150 கோடி பெறப்பட உள்ளது. இது, சிறந்த நிதி மேலாண்மையை எடுத்து காட்டுகிறது. சென்னை நகர மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் பேருந்து சாலை மேம்பாட்டுக்கு ரூ.628.35 கோடி, மழைநீர் கால்வாய் அமைக்க ரூ.1032.25 கோடி, திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.352 கோடி, கட்டிட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.413.63 கோடி என சிறப்பு திட்டங்களுக்கு ரூ.179.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். மேலும், சென்னை நகர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டம், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்பட அனைத்து பணிகளும் அமைந்துள்ளன. கடந்த 2024-25 நிதியாண்டில் சென்னை மாநகராட்சி மேயரின் அறிவிப்புகளில் 51 சதவீதம் நிறைவேற்றப்பட்டு, 44 சதவீதம் நிறைவடையும் நிலையில் உள்ளது. குறிப்பாக, கல்வித்துறையில் 1,19,545 மாணவர்களுக்கு ரூ.7.30 கோடியில் பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
255 பள்ளிகளுக்கு சிசிடிவி காமிராக்கள் வழங்கும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. மேலும் 56,845 மாணவர்களுக்குக் காலணிகள், காலுறைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, தமிழ்நாடு முதல்வரின் தொலைநோக்கு பார்வையின்படி, ஸ்டெம் அகாடமி ஆஃப் எக்ஸலென்ஸ் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் 80 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன. மேலும், துணை முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் சுகாதாரத் துறையில், 10 படுக்கைகளுடன் கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இம்மாத இறுதிக்குள் 16 யுசிஎச்சி, மூன்று 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளில் 38 சிடிஜி கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடக்கின்றன. இது, மகளிரின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சி என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இதேபோல், மழைநீர் வடிகால் துறையில் 9 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணி ரூ.7.08 கோடி மதிப்பில் நடக்கின்றன. பூங்காத்துறை சார்பில், இந்த ஆண்டுவரை மொத்தம் 2,63,742 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், ரூ.5 கோடி மதிப்பில் 34 விளையாட்டுத் திடல்களை மேம்படுத்தும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. மேலும், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ஒரு தெரு தேர்வு செய்யப்பட்டு, அங்கு 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து பெறும் விழிப்புணர்வு திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்து தெருக்களிலும் விரைவில் பின்பற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட வேண்டும். மேலும் சாலைத்துறையில், ரூ.404.00 கோடியில் 4750 சாலைகள் மற்றும் நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவை அனைத்தும் முதல்வர், துணை முதல்வரின் அயராத உழைப்பின் பலனாகும். நடப்பு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு முன்னுரிமை அளித்து, நமது மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்து விளங்க ரூ.40.50 லட்சம் ஊக்கத்தொகை, செய்தித்தாள் வாசிப்பு மற்றும் அறிவுத்திறன் போட்டிகளுக்கு ரூ.86.70 இலட்சம், வளமிகு ஆசிரியர் குழுவின் மூலம் தேர்வு பயிற்சிக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கியுள்ளோம்.
இதேபோல், இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சென்னை பள்ளி மாணவர்கள் கனவுகளை எட்டுவதற்கான மிகச் சிறந்த திட்டங்களையும் உருவாக்கி வருகிறோம். அதேபோல், புதிதாக 141 உடற்கல்வி ஆசிரியர்கள், 29 மேல்நிலைப் பள்ளிகளில் நவீன விளையாட்டு உபகரணங்கள், சிறந்த வீரர்களுக்குத் தரமான தடகள காலணிகள் வழங்கும் திட்டங்கள் மூலமாக, சென்னையில் பல ஒலிம்பிக் வீரர்களை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. உண்மையான பொருளாதார சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் வகையில், 15 மண்டலங்களில், ரூ.7.50 கோடி மதிப்பில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவுகிறோம். இதன் வழியே வெறும் பயிற்சி அளிப்பது மட்டுமல்ல, அவை பெண்களின் சுயசார்பு, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய கதவுகளைத் திறக்கும். முதியோர்களுக்கு 9 சிறப்பு நல மையங்கள், நவீன தகனமேடைகள், டிஜிட்டல் மருந்து காப்பகங்கள், மகப்பேறு மையங்களில் உயிர் காக்கும் கருவிகள் என சென்னை நகரின் ஒவ்வொரு குடிமகனும் தரமான சுகாதார சேவை பெறுவதை உறுதி செய்கிறோம். மேலும் 200 நவீன பேருந்து நிழற்குடைகள், மேம்படுத்தப்பட்ட பேருந்து முனையங்கள், புதுப்பிக்கப்பட்ட 150 விளையாட்டுத் திடல்கள், வாசிப்பு மண்டலங்களுடன் கூடிய பூங்காக்கள் என சென்னையின் ஒவ்வொரு பகுதியும் மாற்றம் காணும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறப்பான பட்ஜெட் ஆகும்.
மேலும் வாட்ஸ்-அப் அடிப்படையிலான சேவைகள், டிஜிட்டல் ஸ்மார்ட் பார்க்கிங், நவீன 100 மின்னணு அறிவிப்புப் பலகைகள் என டிஜிட்டல் யுகத்தில் இன்று சென்னை முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப சக்தியின் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த சிறப்பான திட்டங்கள் வகுத்திருக்கிறோம். இதுதவிர, சென்னை நகர மக்களின் தேவைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், மாநகராட்சி மேயரின் சிறப்பு நிதி ரூ.4 கோடியாகவும் மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.60 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கடும் நிதி நெருக்கடியை சிறப்பாக கையாண்டு, நடப்பாண்டு பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்த சென்னை மாநகராட்சியின் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர், இப்பணிக்கு உறுதுணையாக இருந்த மாநகராட்சி மேயர், துணைமேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பட்ஜெட்டின் மூலமாக, நாம் சென்னையை வெறும் மாநகரமாக மட்டுமல்ல, கனவுகள் நிறைவேறும் நகரமாகவும் மாற்றுகிறோம்.
தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வரின் தலைமையில், ‘நம் சென்னை, நமது பெருமை’ என்ற தாரக மந்திரத்துடன், உலகளவில் சென்னையை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம். இவ்வாறு க.தனசேகரன் உறுதி தெரிவித்தார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையை உலகளவில் முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்: மாநகராட்சி நிலைக்குழு தலைவர் க.தனசேகரன் உறுதி appeared first on Dinakaran.