டெல்லி செல்ல வந்த ராணுவ அதிகாரியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மாலை, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சிங் (25) என்ற ராணுவ அதிகாரி ஒருவர், விமானத்தில் டெல்லிக்கு செல்வதற்காக வந்திருந்தார்.

அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, கைப்பைக்குள் அபாயகரமான பொருள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒழித்தது. இதையடுத்து பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பையை தனியே எடுத்து வைத்தனர். அதோடு ராணுவ அதிகாரி சஞ்சய் சிங்கை விசாரித்தனர். மேலும் அந்த கைப்பையை திறந்து பார்த்து முழுமையாக பரிசோதித்தபோது, கைப்பைக்குள் எஸ்எல்ஆர் ரக துப்பாக்கி குண்டு ஒன்று 7.62 எம்எம் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்தனர்.

மேலும் ராணுவ அதிகாரி சஞ்சய் சிங்க்கிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ முகாமில் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், தனக்கு சென்னை பரங்கிமலையில் உள்ள ஓடிஏ எனப்படும் ஆபீசர்ஸ் டிரெனிங் அகாடமியில், சில நாட்கள் டிரெனிங் நடந்ததாகவும், அதற்காக தான் வரும்போது, ரயிலில் இந்த துப்பாக்கி குண்டுடன் வந்துவிட்டு, பயிற்சி முடிந்து திரும்பிப் போகும்போது, விமானத்தில் துப்பாக்கிக் குண்டை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் ராணுவம் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு துறையை சேர்ந்தவர்கள் துப்பாக்கி, குண்டுகள் போன்றவைகளை எடுத்துச் செல்லும் போது, அதை முன்னதாகவே விமான நிறுவன அதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர்கள் கொடுக்கும் பைகளில் அந்த துப்பாக்கி மற்றும் குண்டுகளை போட்டு, விமானத்தின் துணை பைலட்டிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் அதை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதேபோல் செயல்படுத்தாமல், தனது கைப்பைக்குள் வைத்து, எடுத்து சென்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள், ராணுவ அதிகாரி மீது குற்றம் சாட்டினர்.

அதோடு ராணுவ அதிகாரி சஞ்சய் சிங்கின், டெல்லி விமான பயணத்தையும் ரத்து செய்து, கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டையும், ராணுவ அதிகாரியையும், மேல் நடவடிக்கைக்காக, சென்னை விமான நிலைய போலீசில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.  சென்னை விமான நிலைய போலீசார் இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராணுவ அதிகாரி சஞ்சய் சிங் கூறுவது உண்மைதானா என்பதை அறிவதற்காக, சென்னை பரங்கிமலை ஓடிஏக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கிருந்து ராணுவ அதிகாரிகள் இருவர், சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு வந்து, சஞ்சய் சிங் ராணுவ அதிகாரி தான், பயிற்சிக்காக உத்தரகாண்டில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். இவர் இளம் அதிகாரி என்பதாலும், ஏற்கனவே இதேபோல் பழக்கம் இல்லாததாலும், விதிமுறைகள் தெரியாமல் தனது கைப்பைக்குள் துப்பாக்கிக் குண்டை வைத்து, எடுத்து சென்று விட்டார் என்று கூறினர்.
இதையடுத்து விமான நிலைய போலீசார், சஞ்சய் சிங்கை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் விமான நிலைய காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில், ஓடிஏ அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தனர்.

அதன்படி நேற்று சஞ்சய் சிங் மீண்டும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், விமான பாதுகாப்பு சட்டத்தை தவறுதலாக மீறி, துப்பாக்கி குண்டை கைப்பையில் எடுத்து சென்று விட்டதாக, வருத்தம் தெரிவித்து, எழுதி வாங்கினர். அதன் பின்பு ராணுவ அதிகாரி சஞ்சய் சிங்கை விடுவித்தனர். அதோடு அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எஸ்எல்ஆர் 7.62 எம்எம் ரக துப்பாக்கிக் குண்டை, சென்னை பரங்கிமலையில் உள்ள காவல்துறை ஆயுத கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.

The post டெல்லி செல்ல வந்த ராணுவ அதிகாரியிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: