கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டம் 694 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக காட்டு யானைகள் அதிகளவில் இருப்பதோடு, வலசை செல்லும் யானைகளும் வந்து செல்கின்றன.
இதனிடையே உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலத்தில் மொத்தம் 14,962 முறை காட்டு யானைகள் வனப்பகுதியைவிட்டு வெளியே வந்துள்ளன. போளுவாம்பட்டி, தடாகம், பெ.நா.பாளையம், கல்லார், சிறுமுகை ஆகிய பகுதிகள் அதிக மனித – யானை மோதல் உள்ள பகுதியாக உள்ளன.
இதன் ஒரு பகுதியாக வன எல்லையோரங்களில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியைவிட்டு வெளியே வருவதை, கண்காணிப்பு கோபுரங்களில் கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியே வருவதை தெர்மல் டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தெர்மல் கேமரா அகச்சிவப்பு கதிர்வீச்சை புலப்படும் ஒளியாக மாற்றி காட்டும் கேமராவாகும். இதன் மூலம் வெப்பப்பகுதிகளைப் பார்க்க முடியும். இக்கேமரா மூலம் காட்டு யானையின் உடல் வெப்பத்தை கொண்டு, அதன் நடமாட்டத்தை கண்டறிய முடியும்.
இது காட்டு யானை நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிய உதவும்.மதுக்கரை, மருதமலை, பொன்னூத்து அம்மன் கோவில் ஆகிய 3 இடங்களில் வன எல்லையோரங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் தெர்மல் கேமரா மூலம் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கான கட்டுப்பாட்டு அறை மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் 4 பேர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, சம்மந்தப்பட்ட வனப்பணியாளர்களுக்கு தகவல் அளிப்பார்கள். அவர்கள் விரைந்து சென்று காட்டு யானைகளை விரட்டும் பணிகளை மேற்கொள்வார்கள். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, ‘‘தமிழ்நாட்டில் முதல் முறையாக தெர்மல் கேமரா மூலம் காட்டு யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நார்மல் கேமராவில் 48 எக்ஸ் ஜூம் உள்ளது. தெர்மல் கேமராச்வில் 28 எக்ஸ் ஜூம் உள்ளது. இதனால் தொலைவில் உள்ள யானைகள் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். யானைகள் அதிகம் வெளியே வரும் பகுதிகளில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத பகுதிகளில், யானைகளின் உடல் வெப்பத்தை வைத்து யானைகள் வெளியே வருவது, எந்த பகுதியை நோக்கி செல்கிறது, குறிப்பிட்ட தூரம் வரை எந்த பகுதியில் நிற்கிறது என்பதை கண்டறிய முடியும்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வனப்பணியாளர்களுக்கு தகவல் அளித்து, காட்டு யானைகளை எளிதாக மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முடியும். இந்த கேமராக்கள் யானைகள் நடமாட்டம் உள்ள மற்ற பகுதிகளிலும் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
The post இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தெர்மல் கேமரா மூலம் கண்காணிப்பு appeared first on Dinakaran.